×
Saravana Stores

திருவல்லிக்கேணியும் திருவீதிஉலாவும்

கம்பீரமீசை, ஆஜானு பாகு தோற்றம், முகத்தையும் திருமேனியையும் பார்த்தவுடனே மனதிற்குள் ஆனந்தத் தாண்டவமிட்டு, நம்மை அறியாது ஆனந்தக் கண்ணீர் வந்துவிடும், அப்படி ஒரு வசீகர அமைப்பு, நம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு! பழமை மாறாத புராதனக் கோயிலாக பார்க்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளுக்கு எப்படி வருடம் 365 நாட்களும் ஏதோவொரு உற்சவம் நடைபெறுமோ, அதுபோல திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கும் நாட்கள் முழுவதிலும் ஏதோவொரு உற்சவம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். பெரும்பலான விழாக்கள் மாடவீதிகளில்தான் நடைபெறும். ஆகையால், திருவல்லிக்கேணி மாடவீதிகள் பிரசித்திபெற்றவை, முக்கியத்துவம் வாய்ந்ததும்கூட.

ஆதலால், திருவல்லிக்கேணி வாசிகள் தங்களின் சத்சங்க காரியத்தை திருவல்லிக்கேணி மாடவீதிகளில் செய்ய நினைப்பார்கள், அல்லது செய்யும் நபர்களோடு இணைந்து தங்களையும் ஈடுபடுத்திக் கொள்வார்கள். உதாரணத்திற்கு; பிரம்மோற்சவம் மற்றும் தேர்விழா காலங்களில், பெருமாளுக்கு முன்னேயும் பின்னேயும் வேத பாராயணம் செய்தும், மார்கழி மாதத்தில் பஜனைகளை, தங்களின் சத்சங்கத்தை திருவல்லிக்கேணி மாடவீதிகளில் செய்ய விரும்புவர்.

இதற்கு இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகிறது. ஆகையால், திருவல்லிக்கேணி மாடவீதிகளில் ஏதோவொரு சத்சங்கத்தை நடத்த பலரும் ஏற்பாடுகளை செய்தவண்ணம் இருப்பார்கள். அப்படி ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி, திருவல்லிக்கேணி மாடவீதியில் நடைபெற்றது.

சாதுர் மாதத்தை முன்னிட்டு (சாதுர் மாதம் என்பது சந்நியாசிகள் ஒரே இடத்தில் தங்கியிருந்து கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும்) உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்தர், சென்னை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் திருவல்லிக்கேணி மாடவீதிகளில், “விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்துக் கொண்டே, திருவீதி உலா நடைபெற்றது.

இதில், உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்தர் கலந்து கொண்டு, சிறப்பு செய்தார். அதே போல் இவ்விழாவில், ஸ்ரீபெரும்புதூர் எம்பார் மடம், ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளும் கலந்துகொண்டு ஆசி வழங்கினார். மேலும், திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முன்பு தொடங்கிய இந்த நிகழ்வு, நான்கு மாடவீதிகளில் வலம் வந்தார்கள். வழிநெடுக பக்தர்கள் ஆரத்தி எடுத்து ஸ்வாமிகளை வரவேற்றார்கள். இறுதியில், திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ யதுகிரி யதிராஜ ஜீயர் மடத்திற்கு அழைத்து

வரப்பட்ட ஸ்வாமிகளுக்கு, பூர்ணகும்ப மரியாதைகள் செய்யப்பட்டன. அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு ஸ்வாமிகள் அருளாசி வழங்கினார்கள். இருமடம் ஸ்வாமிகள் இணைந்து, “விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்தபடியே திருவல்லிக்கேணி மாடவீதி உலா வந்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

ரா.ரெங்கராஜன்

The post திருவல்லிக்கேணியும் திருவீதிஉலாவும் appeared first on Dinakaran.

Tags : Thiruvallikeni ,Thiruvethioula ,Kamirameisa ,Aajanu Bhagu ,Parthasarati ,Perumal ,Srirangam ,
× RELATED திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே...