ஸ்ரீ வாமன ஜெயந்தி ஓணம் பண்டிகை – 15.09.2024
திருப்பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலுக்கு, திவ்ய தேசங்கள் 108. அதில் நான்கு திவ்ய தேசங்கள் ஒரே கோயிலுக்குள் உள்ளதென்ற தகவல் அறிவீர்களா? காஞ்சிபுரத்திலுள்ள கச்சி ஊரகம் உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் வந்தால், இந்த நான்கு திவ்ய தேசங்களையும் தரிசிக்கலாம். இங்கே ஆவணி திருவோணம் திருவிழா பிரசித்தி பெற்றது.
வாமன அவதாரம் எடுத்து மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு! அவன் நடத்திய அஸ்வ மேதயாகத்தில் கலந்துகொள்ள வந்தார். மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். பலியும் சம்மதித்தான். அப்போது அவர் திரி விக்ரம் மூர்த்தியாக உயர்ந்து ஓரடியால் மண்ணையும் மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து விட்டு மூன்றாவது அடியை பலியின் சிரசில் வைத்தார்.
அவன் பாதாள லோகத்தைச் சென்றடைந்தான். தானம் வாங்க வந்த பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தைக் காண முடியாமல் போய்விட்டதே என எண்ணி வருந்தினான். அங்கேயே தவத்தில் ஆழ்ந்தான். அவனுடைய தவத்திற்கு இணங்கி சத்திய விரத கோத்திரம் என்னும் காஞ்சியில் உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று காட்சியளித்தார். அத்தலமே `உரைகம்
உலகளந்த பெருமாள்’ கோயிலாகும்.
கருவறையில் மேற்கு நோக்கிய திருமுகத்துடன் உலகளந்த பெருமாள் அருள்பாலிக்கிறார். இடக்கரத்தில் இரு விரல்களையும், வலக்கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டி நிற்கிறார். இரண்டியால் மண்ணையும் விண்ணையும் அளந்த பின் ‘மூன்றாவது அடி எங்கே?’ என்று கேட்கும் விதத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு திரிவிக்ரமன் என்ற பெயரும் உண்டு. தாயாருக்கு, அமுதவல்லி நாச்சியார் என்பது திருநாமம்.
தொண்டை மண்டலமான காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள 22 – திவ்ய தேசங்களில் இத்தலம் ‘கச்சி ஊரகம்’ என காஞ்சிபுரத்தோடு சேர்த்தே கூறப்படுகிறது. ‘கச்சி’ என்றால் காஞ்சிபுரம். இதில் நீரகம், ஊரகம், காரகம், பேரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் ஒரே கோயிலுக்குள் இருக்கின்றன. திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் இந்த நான்கு கோயில் பெருமாள்களையும் பாடியுள்ளார். அப்பாடல்;
‘‘நீரகத்தாய்! நெடுவரையி னுச்சி மேலாய்!
நிலாத்திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துறைநீர வெஃகாவுள்ளாய்!
உள்ளுவா ருள்ளதாய், உலக மேத்தும்
காரகத்தாய்! கார்வானத் துள்ளாய்! கள்வா!
‘காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய், பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணி னேனே!’’
தொண்டை மண்டலத்தின் எப்பகுதியில் இருந்து ஊரகம் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு மற்ற மூன்று பெருமாள்களும் தாயார்களுடன் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்ற வரலாறு இது நாள்வரையிலும் அறிய முடியவில்லை. ரகசியமாகவே இருக்கிறது. நீரகத்தில் ஜெகதீசப் பெருமாளும், நிலமங்கைத் தாயாரும், அருள்பாலிக்கின்றனர். காரகத்தில் கருணாகரப் பெருமாளும், பத்மாமணி நாச்சியாரும் வீற்றிருக்கின்றனர். பேரகம் எனும் கார் வானத்தில் கமலவல்லி நாச்சியாரோடு கார்வானப் பெருமாள் காட்சி தருகிறார்.
திருநீரகம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இந்தப் பெருமாள் மூலவர் பெயர், ஸ்ரீ ஜெகதீஸ்வரப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தரிசனம். தாயார் நிலமங்கை வல்லி விமானம் ஜெகதீஸ்வர விமானம் தீர்த்தம் அக்ரூர தீர்த்தம்.திருஊரகம்: சுமார் 60,000 சதுர அடிப் பரப்பில் மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம், இரண்டு பிராகாரங்களையும் உடையது. மூலவர் உலகளந்த பெருமாள் நின்ற திருக்கோலம். 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட நிலையில், தனது இடது காலை வின்னோக்கித் தூக்கியும், இடது கரத்தின் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டி மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். தாயார் ஸ்ரீ ஆரணிவல்லி. விமானம், ஸார ஸ்ரீகர விமானம். தீர்த்தம், நாகதீர்த்தம்.
திருக்காரகம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் தனக்கென்று ஒரு சந்நதியை அமைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார், திருக்காரகப் பெருமாள். மூலவரின் திருநாமம் கருணாகரப் பெருமாள், தாயார், பத்மாமணி நாச்சியார். தீர்த்தம், அக்ராய தீர்த்தம்.திருக்கார்வனம் எனும் பேரகம்: மூலவர், கள்வர் எனும் கார்வானப் பெருமாள். தாயார், கமலவல்லி நாச்சியார். வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.
மூலவர் திருமகள் மற்றும் பூமி தேவியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தீர்த்தம், கௌரி தடாகம். விமானம், புஷ்கல விமானம். சாதாரண மனிதனாக இருந்த மகாபலி, உலகளந்த பெருமாளின் நெடிய கோலத்தை முழுமையாக காண முடியாமல் பதை பதைத்து நின்றான். பெருமாளும் மனமிரங்கி எளிமையாக ஆதிசேஷன் வடிவத்தில் காட்சியளித்தார். இந்த இடத்தைப் ‘பேரகம்’ என்பர். இங்கு பாம்பு வடிவில் பெருமாள் வீற்றிருக்கிறார். உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ள மற்றொரு சிறப்பு – மூலவருக்கு எதிரில் உள்ள சந்நதி மிகவும் விசேஷமானது.
இங்கே, சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் நான்கு கரங்களுடன் ஆஞ்சநேயர் சுவாமி அற்புதத் திருக்கோலங்கொண்டு அருள்பாலிக்கிறார். இருகைகள் பெருமாளை வணங்கிய நிலையில் அஞ்சலிபரஸ்தமாக விளங்குகிறார். இவருக்கு மூலம் நட்சத்திரம். இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். கலியுக கண்கண்ட தெய்வமான உலகளந்த பெருமாளுக்கு பல்வேறு உற்சவங்கள் மிகச் சிறப்பாக நடந்தாலும், ஒவ்வொரு வருடமும் வரும் ஆவணி திருவோணம் நாளில் நடைபெறும் உற்சவம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருவோனத்திரு விழாக் குறித்து ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் பாடியுள்ளனர். அந்த வகையில் பெரியாழ்வாரும், ‘‘விடுத்த திசைக்கருமம் திருத்தி திருவோணத்திற்கு திருவிழாவில்’’ என்று பாடியுள்ளார். திருவோண நட்சத்திர நாளன்று எம்பெருமானுக்கு விசேஷ வழிபாடுகளும், திருமஞ்சனமும் தீர்த்த வாரியும் கண்டருளப் பண்ணுவர்.திருவோணப் பண்டிகை நன்னாளில் ஓங்கு உலகளந்த உத்தமன் பேர் பாடியை வணங்கி, அனைவரும் நீங்காத செல்வமும் நிறைந்து வாழ்வர் என்பது அசைக்க முடியாத உண்மை.!
தொகுப்பு: முத்துவேல்
The post ஒரே திருக்கோயிலுக்குள் 4 திவ்ய தேசங்கள் appeared first on Dinakaran.