×
Saravana Stores

தோல் பேசும்..!

“கண்ணாலே பேசிப் பேசிக்
கொல்லாதே”
“கண் பேசும் ஜாடையிலே காவியம் கண்டேன்”
“கண்களின் வார்த்தைகள் தெரியாதோ”
“கண்ணோடு கண் நோக்கின் வாய்ச் சொற்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்கிறார் வள்ளுவர்.
இந்தப் பாடல் வரிகளும் குறளும் சொல்வது ஒரே செய்திதான்-
“கண்கள் பேசும்.”
சரி, தோல் பேசுமா?
“பேசும்” என்கிறது இறுதி வேதம் குர்ஆன்.
அது ஒரு மறுமைக் காட்சி.
இறுதி விசாரணைக்காக அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
விசாரணை தொடங்கும். குர்ஆன் கூறுகிறது.
“இறுதியில் அனைவரும் அங்கு சென்றடையும்போது அவர்களின் காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களுடைய உடம்பின் தோல்களும் உலகில் அவை என்னென்ன செயல்களைச் செய்துகொண்டிருந்தன என்று அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறும்.அவர்கள் தங்கள் தோல்களைப் பார்த்துக் கேட்பார்கள்- “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி சொன்னீர்கள்?”அதற்கு அவை கூறும்: “ஒவ்வொன்றையும் பேச வைத்த இறைவனாகிய அல்லாஹ்தான் எங்களையும் பேச
வைத்தான்.” (குர்ஆன் 41:20-21)

மறுமையில் கண், காது, தோல் ஆகியவை ஏன் பேச வேண்டும்? நபிமொழிகளில் இதற்கான விளக்கம் காணப்படுகிறது.கடைந்தெடுத்த குற்றவாளி ஒருவன் இறைநீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான்.உலகில் அவன் செய்த குற்றச் செயல் களின் பட்டியல் வாசிக்கப்படும்.தான் நிற்பது இறைநீதிமன்றத்தில் என்பதையும் பொருட்படுத்தாமல் தான் செய்த அந்தக் குற்றச் செயல்களை எல்லாம் மறுத்துக்கொண்டே இருப்பான்.அதற்கான சாட்சிகள் கொண்டு வரப்பட்டால், “இவையெல்லாம் பொய் சாட்சிகள்” என்று துணிந்து அதிரடி காட்டுவான்.“இவனை இப்படியே விட்டால் சரிவராது” என்று இறைவன் அவனுடைய உடல் உறுப்புகளுக்குப் பேசும்படி ஆணையிடுவான்.அந்தக் குற்றவாளியின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அவன் தங்களிடம் எப்படிப்பட்ட வேலைகளை வாங்கினான், என்னென்ன வெல்லாம் செய்யவைத்தான் என்று சாட்சி சொல்லத் தொடங்கிவிடும்.இறுதி வேதம் குர்ஆனின் ‘யாஸீன்’ அத்தியாயத்திலும் இது தொடர்பாக ஒரு திருவசனம் உள்ளது.“இன்று அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்துவிடுவோம். (உலகில்) அவர்கள் எவற்றைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கைகள் நம்மிடம் சொல்லும். அவர்களின் கால்களும் சாட்சி பகரும்.”(குர்ஆன் 36: 65)ஆகவே பாவங்களிலும் குற்றச் செயல்களிலும் ஈடுபடும்போது யாரும் நம்மைப் பார்க்கவில்லையே என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது.நம் கண்கள், காதுகள், கைகள், கால்கள், ஏன்- நம் உடம்பின் தோலும்கூட மறுமையில் நமக்கு எதிராக சாட்சி சொல்லும் என்பதை உணர்ந்து இம்மையில் இறைவனுக்கு அஞ்சி வாழ்வோம். நல்வழியில் நடை போடுவோம்.
– சிராஜுல் ஹஸன்.

 

The post தோல் பேசும்..! appeared first on Dinakaran.

Tags : Valluvar ,
× RELATED ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு...