ஐரோப்பாவின் பிரெஞ்சு தேசத்தில் 1809-ம் ஆண்டு ஐனவரி மாதம் 4-ம் தேதி பிறந்த லூயிஸ் பிரெய்லியின் தந்தையார் சைமன் ரெனே, குதிரைகளுக்கான லாடங்களையும், அவற்றுக்குத் தேவையான தோலால் ஆன பிற பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்தார். அவர் வைத்திருந்த துளையிடுவதற்கும், செதுக்குவதற்குமான கருவிகள்தான் குழந்தை பிரெய்லிக்கு விளையாட்டுப் பொருள்களாகவும் மாறின. தினமும் தந்தையின் பட்டறைக்குச் செல்லும் பிரெய்லி, அவற்றை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார். ஒருநாள் விதி அவரது வாழ்வில் மிக மூர்க்கத்தனமாக விளையாடியது. விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை பிரெய்லியின் கண்களைக் கூரான குத்தூசி ஒன்று எதிர்பாராதவிதமாகக் குத்திவிட, ஒரு கண்ணை இழந்தார் பிரெய்லி. அப்போது அவருடைய வயது மூன்று.
பாதிக்கப்பட்ட கண்ணைக் குணமாக்க முயற்சிகள் நடந்தன. ஆனாலும் அன்றைய காலகட்டத்தில் மருத்துவ வசதிகள் வளர்ச்சியடையாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி அவருடைய மற்றொரு கண்ணிலும் பார்வை பறிபோனது. குழந்தை பிரெய்லி தன் பார்வை முழுவதையும் இழந்த போது, அவரது வயது ஐந்து. கண்பார்வை இழந்தவர்கள் பிறரின் பரிதாபமின்றி, அடுத்தவரின் உதவியை நாடாமல் வாழ முற்பட வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. பிரான்ஸில் மட்டுமல்ல, உலகம் முழுதும் இருக்கும் விழுப்புலனற்றோர் கல்வி கற்க, பொதுவான ஒரு மொழி உருவாக்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பிரெய்லி. இரவும் பகலும் பாடுபட்டு ஆராய்ச்சியில் இறங்கிய பிரெய்லி, புள்ளிகளைப் பலவிதமாக மாற்றி மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து, ஒரு புதிய குறியீட்டு மொழியை உருவாக்கினார்.
வெறும் ஆறே புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த மொழியில் மொழி, இலக்கணம், கணிதம், அறிவியல் கோட்பாடு, வரலாறு, புவியியல், இசைக்குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம் என்பதையும் அவரது 15-வது வயதிலேயே நிரூபித்துக் காட்டினார். எந்தக் குத்தூசி தன் பார்வையைப் பறித்ததோ, அதே குத்தூசியைக் கொண்டே ஆறு புள்ளிகளின் அட்சரத்தை உருவாக்கினார் பிரெய்லி. அந்த ஆறு புள்ளிகளும் கோடுகளுமே பின்னாளில் அவரைப் போன்ற பல கோடி பார்வைச் சவால் உள்ளவர்களின் பார்க்கும் கண்களாக மாறின.ஒரு காலத்தில் பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமே இருந்த கல்வி உட்பட பல விஷயங்கள், இன்று விழிப்புலன் அற்றோருக்கும் சாத்தியமாகி உள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பார்வையற்றோரின் கல்வியறிவு, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் தொடர்கிறது.
பிரெய்லி எனும் மந்திரமொழி!இறைமக்களே, முன்னொரு காலத்தில் கண் பார்வை இல்லை என்றால் கல்வி என்பது கனவில்கூட சாத்தியமில்லை. அவர்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்த ஆய்வோ, ஆராய்ச்சியோ எதுவுமே அக்காலத்தில் இருக்கவில்லை. இப்படி பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் எதிர்காலமே விடை தெரியா கேள்விக்குறியாக இருந்த சமயத்தில், அவர்களின் இருண்ட உலகில் ஒளிக்கீற்றாக வந்தார் லூயிஸ் பிரெய்லி. இன்று பிரெய்லி உயிருடன் இல்லை. ஆனால் பலரின் வாழ்வில் இன்றும் தீபமேற்றிக்கொண்டிருக்கிறார்.
‘‘மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் மக்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’’ (மத்.5:16) என இறைவேதம் கூறுகிறது.
– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.
The post இருண்ட உலகில் ஒளிக்கீற்றாக மாறுங்கள் appeared first on Dinakaran.