×

17ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்: உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி

சென்னை: சுனாமி தாக்கத்தின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கம், காசிமேடு ஆகிய கடற்பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள், அரசியல் கட்சியினர் இன்று அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது சுனாமி பேரழிவு. இதில் தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்களின் உடமைகளையும் பறிகொடுத்தனர். இந்த நிலையில் இன்று 17வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தங்கள் உறவுகளை இழந்த பலரும் அந்தந்த கடற்கரை பகுதிக்கு சென்று உறவுகளை நினைத்து பூ தூவி, பால் தெளித்து அஞ்சலி செலுத்தினர். இதனால், இன்று கடற்கரை பகுதிகள் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி நிகழ்ந்த தினத்தை துக்க நாளாக அறிவித்து மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவான்மியூர், திருவொற்றியூர், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ெசலுத்தினர்.திமுக சார்பில் திருவொற்றியூர், கேவிகே குப்பத்தில் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கர் தலைமையில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, நிர்வாகிகள் ராமநாதன், கே.பி.சொக்கலிங்கம், ஆதிகுருசாமி ஆகியோர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து, கடற்கரையில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நலிவுற்ற மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல் மாநில திமுக மீனவரணி செயலாளர் ஆர்.பத்மநாபன் தலைமையில் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ்.இளங்கோவன், கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ ஆகியோர் ஒண்டிக்குப்பம் கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று கடற்கரையில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நலிந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் தலைமையில், திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே கடற்கரையில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, நிர்வாகிகள் கே.கார்த்திக், அஜாக்ஸ் பரமசிவம், சிவில் முருகேசன் உள்பட ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி, கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களுக்கு பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக பாஜ மீனவர் அணி சார்பில் அணி சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாஜக மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கடற்கரை பகுதியில் சுனாமியின் போது உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி ெசலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாஜ பொது செயலாளர் கருநாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மேலும் இறந்தவர்களின் நினைவாக கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் மரியாதை செலுத்தப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் 600 பேருக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அண்ணாமலை வழங்கினார்.தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமையில் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில்  சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இததில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாறு துரை, சுமதி அன்பரசு, ஆர்டிஐ பிரிவு மாநில துணைத் தலைவர் மயிலை தரணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தலைமையில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அன்பழகனார், தமாகா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான மீனவர் சங்க நிர்வாகிகள், மீனவ பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களும் மணற்பரப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். சோழிங்நல்லூர் சின்ன நீலாங்கரைகுப்பம் மீனவ மக்கள், ஊர் பஞ்சாயத்தார் தலைமையில் அமைதிப்பேரணி நடந்தது. இதே போல பல்வேறு அரசியல் கட்சியினர், மீனவ அமைப்பினர்  சென்னை கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர்….

The post 17ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்: உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : 17th Tsunami Remembrance Day ,Marina ,Casimate ,Chennai ,Kasimedu ,of ,to ,
× RELATED மெரினாவில் குளித்த போது அலையில்...