* 14 மாதங்களில் இந்தியாவில் இருந்து ரூ.10,188 கோடி மோசடி, ஆட்களை அனுப்பும் 10 இடைத்தரகர்கள் கைது; சிபிசிஐடி தகவல்
சென்னை: வெளிநாட்டில் வேலை என்று சென்று கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளில் சைபர் மோசடி நபர்களிடம் சிக்கி நாடு திரும்ப முடியாமல் தவிர்த்து வரும் 1,039 தமிழர்களை மீட்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 14 மாதங்களில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக ரூ.10,188 கோடி பணத்தை கிரிப்டோ கரன்சி மூலம் தங்கள் நாட்டிற்கு சைபர் குற்றவாளிகள் அனுப்பியுள்ளதும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு என கணினி, தட்டச்சு மறறும் ஆங்கில மொழி புலமை வாய்ந்த நபர்களை சைபர் குற்றவாளிகள் இடைத்தரகர்கள் மூலம் அழைத்து செல்கின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து பலர் மோசடி நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு சென்று அங்கிருந்து லாவோஸ் மற்றும் கம்போடியாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அப்படி அழைத்து செல்லப்பட்ட நபர்களுக்கு ஊதியத்துடன் தங்கும் இடம் வழங்கி, கம்பி வேலி போடப்பட்ட கட்டிடங்களில் அடைத்து வைத்து, அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு, முதலீட்டு மோசடி, சட்டவிரோத கடன் வழஙகும் செயலி மோசடி, திருமண மோசடி, போன்ற இணைய மோசடிகள் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அப்படி மோசடி செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவிக்கும் நபர்களின் மீது மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் பிற உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
அப்போது மோசடி நபர்களிடம் தங்களை விடுவிக்க கோரும் நபர்களிடம் பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து தப்பி கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நாடு திரும்பிய நபர்கள் இதுதொடர்பாக இந்திய சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் தெற்காசிய நாடுகளுக்கு சென்று கலந்தாய்வு கூட்டம் நடத்தியது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு சார்பில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் தமிழ்நாட்டில் இதுபோன்ற மோசடி நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பாத 1,285 நபர்களின் விபரங்களை பெற்று தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தினர். மேலும், புலம்பெயர்ந்தோர், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், குடிவரவு பணியகம் ஆகிய துறைகளிடம் இருந்து தமிழ்நாடு திரும்பிய 186 பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் பெற்று சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தி பல தகவல்களை பெற்றுள்ளனர்.
சென்னை, சேலம், கடலூர், தஞ்சை, திருவாரூர், மதுரை, அரியலூர், மதுரை நகரம் மற்றும் விருதுநகர் பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பியதாக தனித்தனியாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 இடைத்தரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் அளித்த அறிக்கையின் படி கடந்த 2023 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரையலான 14 மாதங்களில் கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள பொதுமக்களிடம் பல்வேறு மோசடிகள் மூலம் பெறப்பட்ட பணத்தை இந்திய வங்கி கணக்குகளில் இருந்து கிரிப்டோ கரன்சியாக மாற்றி தங்களது நாடுகளுக்கு சைபர் குற்றவாகிகள் அனுப்பியுள்ளனர். அதன்படி கடந்த 14 மாதங்களில் இந்தியாவில் இருந்து மோசடி நபர்கள் ரூ.10,188 கோடியை சட்டவிரோதமாக மோசடி செய்துள்ளனர். இதுபோன்ற மோசடி செய்யும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
* வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எச்சரிக்கை
வெளிநாடுகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் மனிதவள மேலாளர்கள், கணினி பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைக்கு செல்லும் இன்ஜினியர்கள், பட்டதாரிகள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கு முன்பு வேையின் தன்மை, வேலை செய்யும் இடம் ஆகியவை சரிபார்க்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். இடைத்தரகர்கள், ஏஜென்டுகள் மூலம் பணிக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்னர்.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
* வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவு(டிஜிபி அலுவலகம்) எஸ்பி- 9498654347
* அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் உதவி எண்கள்:
* இந்தியாவில் உள்ள உறவினர்கள் தொடர்பு கொள்ள 18003093793
* வெளிநாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள 8069009901
* மீஸ்டு கால் கொடுக்க 8069009900
The post கம்போடியா, லாவோஸ் நாடுகளில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்கி தவிக்கும் 1,039 தமிழர்களை மீட்க நடவடிக்கை appeared first on Dinakaran.