சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் கொள்முதல் விலையில் கிலோவிற்கு 50 விழுக்காடு வரை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 60 முதல் 65 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அந்த மாநிலங்களில் மழை மற்றும் விளைச்சல் பாதிப்பால் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. அந்த வகையில் கோயம்பேடு சந்தைக்கு 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது. இதனால் வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோவிற்கு ரூ.60 முதல் ரூ.90 ஆக விலை உயர்ந்துள்ளது.
இதே போல் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெங்காயம் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை அதிகரித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் நாள் ஒன்றிற்கு 1300டன் வெங்காயம் தேவைப்படும் நிலையில் வெங்காயம் வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காய்கறி வாங்க சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காய தட்டுப்பாடு என்பது தொடர்கதை ஆகிவருகிறது. இந்த ஆண்டும் வெங்காயம் வரத்து குறைய துவங்கிய நிலையில் விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
The post கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைவால் விலை உயர்வு: மொத்த விற்பனையில் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விலையேற்றம் appeared first on Dinakaran.