×
Saravana Stores

2,327 இடங்களுக்கு தமிழகம் முழுவதும் நாளை 2763 மையங்களில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2”ஏ” பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 20ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் 13 இடம், துணை வணிக வரி அலுவலர் 336 இடம், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் 5, நன்னடத்தை அலுவலர் 1, சார்பதிவாளர்(கிரேடு 2) 5, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர் 2, சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் 2, குற்றப்புலனாய்வு தனிப்பிவு உதவியாளர் 19, சட்டம் உதவிபிரிவு அலுவலர் 3, டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர் 3, டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர் மற்றும் நிரலர் 4, வனவர் 107, தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் வனவர் 7 இடங்கள் என 507 இடங்கள் அடங்கும்.

குரூப் 2ஏ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர் 1 இடம், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர் 497 இடங்கள், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் 273, தொழிலாளர் உதவியாளர் 42, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை உதவியாளர் 68, தலைமை செயலகம் நேர்முக எழுத்தர் 121, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உதவியாளர்(கிரேடு 3) 44 என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் அடங்கும். இப்பதவிக்கான முதல்நிலை எழுத்து தேர்வு நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இத்தேர்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுதுகின்றனர்.

இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 2763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் தலைமையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 2763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 9 மணிக்கு மேல் வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு எழுதுபவர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.

தவறினால் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்னணு சாதனங்களான செல்போன் மற்றும் புத்தகங்கள் குறிப்பேடுகள், கைப்பைகள் மற்ற அனுமதிக்கப்படாத பொருட்களை தேர்வு தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வர்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும் அல்லது தேர்வாணையத்தில் விதிக்கப்படும் வேறு ஏதேனும் அபராதத்திற்கும் உள்ளாக நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.

The post 2,327 இடங்களுக்கு தமிழகம் முழுவதும் நாளை 2763 மையங்களில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Government Personnel Selection Board ,TNPSC ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளில்...