மாஸ்கோ: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்த நாடு மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சிறிய நாடான உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்த ரஷ்யாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக புதின் அண்மையில் அறிவித்தார்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக புதின் கூறியிருப்பதாவது: ரஷ்ய பிராந்தியங்கள் மீது ஆளில்லா ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் திறன் உக்ரைன் ராணுவத்திற்கு கிடையாது. இந்த ஏவுகணைகளை, செயற்கைகோள் மூலமான உளவுதகவல்களை பெறாமல் பயன்படுத்த முடியாது.
அந்த வசதிகள் உக்ரைனிடம் இல்லை. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா அல்லது நேட்டோ செயற்கைகோள்களை தான் உக்ரைன் பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக, இந்த ஏவுகணைகளுக்கு தேவையான சில அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளது. உக்ரைனிய வீரர்களால் பயன்படுத்த முடியாது. எனவே, இந்த போரில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுபடுகிறதா அல்லது இல்லையா என்பதே முக்கியம். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அனுமதித்தால், அது போரின் தன்மையை மாற்றும். அது நேட்டோ படைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம்” இவ்வாறு அவர் கூறினார்.
The post ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் திடீர் எச்சரிக்கை appeared first on Dinakaran.