×

மதுர சாயி

இணக்கமொடு நின்னை இதயத்தில் எண்ணி
வணக்கஞ் செலுத்தி வழுத்த- எனக்குனது
தூயதிருப் பாதம் துணையெனவே
பற்றவருள் சாயிபா பாவே சரண்.

– பெரும்புலவர் சனகை. கவிக்குஞ்சரனார் (ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை, 1961)

தாஸ்கணு மஹராஜ் என்று பிரசித்தி பெற்ற கணபத்ராவ் தத்தாத்ரேய ஸஹஸ்ரபுத்தே என்னும் பக்தரை பாபா இரு நோக்கங்களுக்காக தம்மிடம் வரும்படி செய்தார். ஒன்று அவருடைய ஆன்மிக வாழ்வு உயர வேண்டும். இரண்டு சாயி பக்தியின் மூலமாக பொது மக்களுக்கு உயர்ந்த சேவையைச் செய்ய வேண்டும்.சீரடியில் ‘உருஸ்’ எனப்படும் சந்தனத் திருவிழாவும் ராமநவமித் திருவிழாவும் ஒன்றாகவே கொண்டாடப்பட்டன. அந்தத் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் கீர்த்தனங்கள் பாடுவதற்கு ‘ஹரிதாஸ்’ ஒருவரை நியமிப்பது வழக்கம். அவ்வகையில் பாபாவால் ‘கணு’ என்றழைக்கப்பட்ட தாஸ்கணு ஹரிதாஸாக நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

கீர்த்தனைகள், ஹரிகதைகள் செய்வதில் தாஸ்கணு நிபுணர். நல்ல சாரீரத்துடன் இனிமையான குரலில் கதைகளைச் சொல்வதில் வல்லவர். கீர்த்தனங்களைப் பாடி ஏழு அல்லது எட்டு மணி நேரமானாலும் ஆயிரக்கணக்கான மக்களை அப்படியே உட்கார வைத்து விடுவார். துக்காராம், நாமதேவர், ஞானதேவர் யாரைப்பற்றி கதை சொன்னாலும் தாஸ்கணு தம்மருகில் பாபா படம் ஒன்றை வைத்துக்கொண்டு, ‘இன்று நம்மிடையே வாழ்ந்து வரும் சத்புருஷர், மகான் சாயிபாபா; அவர் சீரடியில் இருக்கிறார்; அவருடைய தரிசனம் ஒன்றே நமக்குப் பெரும் பாக்கியங்களைக் கொடுக்கும்’ என்று தம்முடைய ஒவ்வொரு ஹரிகதா முடிவிலும் சொல்லி விடுவார். அவருடைய ஹரிகதைகளை கேட்ட மக்கள் சீரடியை நோக்கிச் சென்றனர். தாஸ்கணு ‘ஹரிபக்த பாராயண கீர்த்தன்காரர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். பாபா அவருடைய வாழ்க்கையில் ஆன்மிக ஞானம் வளர்வதற்கு பல வகைகளிலும் உதவி செய்தார். சீரடி போகும் போதெல்லாம் அவரை விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யச் சொல்வார், பாபா.

‘‘ஷிர்டி மாஜே பண்டரபுர சாயிபாபா ரமாவர
ஸுத்த பக்தி சந்திரபாகா பாவ புண்டலீக ஜாகா
யா ஹோ யா ஹோ அவகே ஜன கரா பாபாம்சீ வந்தன
கணு ம்ஹணே பாபா சாயி தாவ பாவ மாஜே ஆயீ’’

‘‘சீரடியே நமது பண்டரிபுரம்; சாயிபாபாவே விட்டல் (மஹாவிஷ்ணு); தூய்மையான பக்தியே சந்திரபாகா நதி; நமது பாவமே (Bhava) பக்த புண்டரீகன்; வாருங்கள் வாருங்கள் மக்களே! வந்து பாபாவை வணங்குங்கள். குழந்தைகளான நம்மைக் கண்டு ஓடிவரும் தாயான பாபாவை இந்த தாஸ்கணு போற்றுகிறார்’’.

தாஸ்கணு இயற்றிய இப்பாடல் பாபாவின் ஆரத்தியாக மலர்ந்தது எனலாம். (பாபாவின் ஆரத்தி பாடல்கள் பற்றி எதிர் வரும் மாதங்களில் சிந்திப்போம்).

இத்யேச பண்டரீபுர மாஜே
பக்தி பீமாதீர பாவ புண்டலீக
நாஹிம் ம்ஹணாவா தூர (இத்யேச)
அனுரேனு வ்யாபக விட்டல அஸதாம்
ஆத்மா விட்டல தூர (இத்யேச)
ஏகா ஜானார்ந்தனீம் நிஜகுரு பஜனீம்

கைஸே ம்ணாவா தூர (பண்டரீபுர)
‘‘நாம் இருக்கும் இடமே பண்டரீபுரம்; நமது பக்தியே பீமா நதிக்கரை;
பாவமே (Bhava) பக்த புண்டலிகன்; அணுக்களுக்குள் வியாபித்து
ஆத்மாவாக விட்டலன் இருக்கும போது தூரம் எதுவும் இல்லை;

உண்மையான குருவை அடைந்தவர்களுக்கு பண்டரீபுரம் அருகில் இருக்கும் தூரம் தான் என்கின்றார் ஏகா ஜனார்த்தனி’’. இது சந்த் ஸ்ரீ ஏகநாதரின் அபங்கம். ஸத்குருவை அடைந்து விட்டாலே பண்டரீபுரம் நம்மிடத்தில் உள்ளது என்பது கருத்து.

ஓம் ஸ்ரீராம் ஜய்ராம் ஜய் ஜய்ராம்
ஐஸே நிஸி-தின நாம காதா(ம்)
ப்ரேம ஸ்வ ஸேசி யேயீல ஆதா(ம்)
நிஜ பத பாவரே ஆராம
ம்ஹணதா(ம்) (ஓம் ஸ்ரீ)

– என்னும் சந்த் ஸோஸீரா அருளிய அபங்கம் ராமநாம மகிமையைக் கூறுவது. ‘ஓம் ராம் ஜய்ராம் ஜய் ஜய்ராம்’ என்ற நாமத்தை இரவும் பகலும் பிரேமையோடு இடைவிடாது ஜபிக்க உண்மை நிலையான ஆனந்தம் சித்திக்கும். எனவே, ஆராம (ஓய்வாக இருக்கும் பொழுது கூட) ஆ ராம, அந்த ராம நாமத்தைச் சொல்ல வேண்டும்.இந்த அபங்கங்களைக் கருத்தில் கொண்டே தாஸ்கணு பாபாவை, ‘‘சீரடி மாஜே பண்டரீபுர ஸாயிபாபா ரமாவர’’ என்று போற்றி துதி செய்கிறார். பாபா பக்தர்களுக்கு தாஸ்கணு எழுதிய இந்தத் துதி ஒன்றே போதும்.

தொடக்கத்தில் தாஸ்கணு மஹராஜ் ஹரிகதைகளுக்குச் செல்லும் போது அழகாக உடையணிந்து செல்வார். நேர்த்தியான மேலங்கியும், ஜரிகைத் துப்பட்டாவும் அணிந்து ஆடம்பரத்துடன் செல்வதைப் பார்த்த பாபா அவரை அழைத்து, ‘ஹரிகதை நடத்த மாப்பிள்ளை போல் செல்ல வேண்டுமா? அலங்காரங்களை அகற்றிவிடு. கீர்த்தனை பக்தியை ஆரம்பித்தவர் நாரதர். நாரதர் எவ்வித உடையில் இருக்கிறார் என்று நீ கவனித்தது இல்லையா? அதை அப்படியே பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்.

ஹரிகதை, கீர்த்தனைகள் செய்யும் போது, நாரத பத்ததியைப் புகழ்ந்து அதன்படி நடக்கத் தூண்டிய ஸ்ரீசாயி போற்றி (கதா கீர்த்தனா பத்தத்யாம் நாரதாநுஷ்டிதம் ஸ்துவன்) என்று ஸாயி ஸஹஸ்ர நாமம் போற்றும். சாயிநாதரின் அருளால் தாஸ்கணுவே ஞானிகளின் வாழ்க்கையைப் பாடல்களாக இயற்றி கீர்த்தனம் செய்தார். ஹரிகதாவை எல்லா இடங்களிலும் இலவசமாகவே செய்தார். இதனால் தாஸ்கணுவின் புகழ் எங்கும் பரவியது. இவ்வாறு தாஸ் கணுவை மக்கள் போற்றும் கீர்த்தன்காரராக பாபா மாற்றிவிட்டார்.

புனே, அஹமத்நகர் ஜில்லாக்களில் பாபா அறிந்து கொள்ளப்பட்டார். தாஸ்கணு தம்முடைய உயர்வான கீர்த்தனைகளால் பாபாவின் புகழைப் பரப்பினார். தமது அழகிய பாடல்கள் மூலம் கூடியிருந்த மக்களை பாபாவிடம் ஆற்றுப்படுத்தினார். கீர்த்தனைகள் கேட்க வந்தவர்கள் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள். சிலர் ஹரிதாஸின் புலமையையும், சிலர் இனிமையான பாடல்களையும், சிலர் நகைச் சுவைகளையும் சிலர் தத்துவங்களையும் இரசிப்பர். அதன் மூலமாக ஞானிகளிடத்தோ கடவுளிடத்தோ நம்பிக்கையும் பக்தியும் பெறுவர்.

அவ்வகையில் தாஸ்கணுவின் கீர்த்தனைகள் கேட்பவரை ஈர்த்து வியப்பில் ஆழ்த்தும் தன்மையுடையதாக அமைந்திருந்தன. தாஸ்கணு ஒருமுறை தாணேவில் உள்ள கௌபீனேஷ்வரர் கோயிலில் சாயிநாதரின் புகழைப்பாடி கீர்த்தனை செய்து வந்தார். அப்படிக் கேட்டவர்களில் ஒருவர் சோல்கர், சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தவர். அவர் பாபாவின் மகிமையைக் கேட்டு மனமுருகி, அங்கே, அப்போதே, பாபாவிற்கு மானசீகமாக வணக்கம் செய்து விரதம் பூண்டார்: ‘பாபா நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத ஓர் ஏழை.

தங்களது அருளால் நான் இலாகாவிற்குரிய தேர்வில் வெற்றி பெற்று நிரந்தர உத்தியோகம் பெற்றால், நான் சீரடி வந்து தங்கள் பாதங்களில் வீழ்ந்து, தங்கள் நாமத்தினால் கற்கண்டை விநியோகம் செய்வேன்.’’ இது நிறைவேறுவதற்குரிய நல்ல அதிர்ஷ்டம் இருந்ததால், சோல்கர் பாபாவின் அருளால் தேர்ச்சியடைந்தார். தனது விரதத்தை எவ்வளவு விரைவாக நிறைவேற்றுவது என்ற குறிக்கோளில் இருந்தார். சோல்கரின் குடும்பம் பெரிது.

வாங்கும் சம்பளம் குறைவு. குடும்பத்திற்கே போதவில்லை என்ற நிலையில் சீரடி சென்று வர பணம் வேண்டும். தனது செலவைக் குறைத்து பணத்தைச் சேமிக்கத் தீர்மானித்தார். அன்றாடம் தாம் அருந்தும் தேநீரிலும், உணவிலும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்தார். சர்க்கரைக்கு ஆகும் செலவை மிச்சம் பிடித்தார். தேவையான பணம் சேர்ந்தவுடன் சீரடிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அவர்தம் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

ஒரு தேங்காயை அர்ப்பணித்தார். தனது விரதப்படி மனசுத்தியுடன் கற்கண்டை விநியோகிக்க ஆரம்பித்தார். விநியோகம் முடிந்தவுடன் பாபாவிடம், தாம் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தமது ஆசை நிறைவேறியதாகவும் கூறினார். அப்பொழுது பாபா, தம்மருகில் இருந்த பாபுசாஹேப் ஜோக்கிடம், ‘‘இவருக்கு சர்க்கரை முழுமையாகப் போட்டு ஒரு தேநீர் கொடுக்கவும்” என்று கூறினார்.

இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு சோல்கர் மனமுருகி கண்கள் பனிக்க நின்றிருந்தார். தமது சொற்களின் மூலம் சோல்கரின் மனதில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பாபா வெளிப்படுத்தினார். அவருடைய விரதப்படி தாம் கற்கண்டைப் பெற்றுக் கொண்டதையும், தேநீரில் சர்க்கரை சேர்க்கக் கூடாது என்ற இரகசிய தீர்மானத்தை தாம் முழுமையாக அறிந்திருப்பதையும் பாபா குறிப்பிட்டார்.

நம்பிக்கையும் பக்தியுமே ஆன்மிக வாழ்வின் இரண்டு அம்சங்கள். ‘‘என் முன்னர் பக்தியுடன் உங்கள் கரங்களை நீட்டுவீர்களேயானால், உடனேயே இரவும் பகலும் உங்களுடன் கூடவே நான் இருக்கிறேன். இவ்வுடம்பால் நான் இங்கேயே இருப்பினும் ஏழ்கடலுக்கு அப்பால், நீங்கள் செய்வதையும் நான் அறிவேன். இந்தப் பரந்த உலகின்கண் நீங்கள் விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.

நான் உங்களுடனேயே இருக்கிறேன். உங்களது இதயமே எனது இருப்பிடம். நான் உங்களுக்குள்ளேயே இருக்கிறேன். உங்களது இதயத்துள்ளும் அதைப் போன்ற சகல ஜீவராசிகளின் இதயங்களினுள்ளும் இருக்கும் என்னையே எப்போதும் வணங்குவீர்களாக! என்னை இங்ஙனமாக அறிபவர் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவரும் அதிர்ஷ்டசாலியும் ஆவார்.’’ பாபாவின் பொருள் பொதிந்த இந்த வார்த்தைகள், நம் பிரார்த்தனைக்கு கிடைத்த வரமாகும்.

அதனால் தான் ஸாயி ஸத்சரிதம் எழுதிய ஹேமத்பந்த், ‘‘ஸத்சரிதத்தில் சோல்கரின் இந்நிகழ்ச்சி இடம் பெறும் பதினைந்தாம் அத்தியாத்தை எவரொருவர் பக்தியுடன் தினமும் கருத்தூன்றி படிக்கிறாரோ அவரது அனைத்து துன்பங்களும் பாபாவின் அருளால் நீங்கும்’’ என்பதை சத்திய வாக்காக-வாக்கியமாக குறிப்பிடுகிறார்.

‘‘அம்ருதாஹுனிகோட நாம துஜே(ம்) தேவா- மதுரம் மதுரம் உன் நாமம் தேவா! அமுதினும் இனிது உன் திருநாமம்” என்று ஸ்ரீ நாமதேவர் விட்டலனைத் துதிக்கின்றார். அதைப் போன்றே, பாபாவின் நாமமும் மதுரமானது. அது தாஸ்கணு கீர்த்தனையிலும், சோல்கரின் தேநீரிலும் இனிக்கும் மதுரம். நம் உள்ளத்திலும் இனியும், என்றும் இனிக்கும் மதுரம்.

தொகுப்பு: முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post மதுர சாயி appeared first on Dinakaran.

Tags : Saiba Bawee Saran ,Kavikuncharanar ,Ganapatrao ,Taskanu Maharaj ,
× RELATED துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது