×
Saravana Stores

4 மாணவிகள் சிதம்பரம் பஸ் நிலையத்தில் மீட்பு

கடலூர், செப். 12: கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து மாயமான 4 மாணவிள் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் மீட்கப்பட்டனர். தோழியை பார்க்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். கடலூரில் உள்ள பிரபல தனியார் பெண்கள் பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 9ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர்.

ஆனால் கிடைக்காததால் நேற்று முன்தினம் இரவு பள்ளிக்கு வந்து தகவல் தெரிவித்தனர். பின்னர் புகாரின் பேரில் புதுநகர் போலீசாரும் மாணவிகளை தேடி வந்தனர். தகவலின் அடிப்படையில் பள்ளிக்கு வந்த டிஎஸ்பி பிரபு தலைமையிலான போலீசார் பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் தேடி வந்தனர். மாணவிகளின் புகைப்படங்கள் பல்வேறு காவல்நிலையங்களுக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களும் தேடி வந்தனர்.

மாயமான மாணவிகள் 4 பேரில் 3 பேர் கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள், ஒருவர் புவனகிரியை சேர்ந்தவர் என்பதும், பள்ளி விடுதியில் தங்கி படித்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை சிறப்பு வகுப்பு முடிந்து 5 மணிக்கு பள்ளியை விட்டு ஒன்றாக வெளியேறும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் போலீசார் ரோந்து சென்ற போது மாயமான மாணவிகள் 4 பேரும் அங்கு நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் பெயர், விவரங்களை சேகரித்து உறுதிப்படுத்தி கொண்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, தங்களின் தோழி சமீபத்தில் டிசி (மாற்று சான்றிதழ்) வாங்கிக்கொண்டு சிதம்பரம் பள்ளியில் படித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நாங்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் பஸ் ஏறி இங்கு வந்தோம் என்று தெரிவித்தார்களாம். இதையடுத்து 4 மாணவிகளையும் சிதம்பரம் போலீசார் கடலூர் புதுநகர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கு அறிவுரை கூறினர். தொடர்ந்து பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் மாணவிகளை ஒப்படைத்தனர். மாயமான மாணவிகள் கிடைத்ததால் அவர்களின் பெற்றோர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். மாலையில் மாயமான பள்ளி மாணவிகள் சில மணி நேரங்களிலேயே போலீசாரால் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 4 மாணவிகள் சிதம்பரம் பஸ் நிலையத்தில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chidambaram bus station ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு