நெல்லை, செப். 11: கோயில் கொடை, திருமண விழாவில் முதல் மரியாதையை தடுத்ததால் அதிமுக நிர்வாகியை வெட்டிக்கொன்றதாக கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் வெளியப்பன் (49). அரசு ஒப்பந்ததாரரான இவர், அதிமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். இவரது மனைவி மாரிச்செல்வி(45), மேலநீலிதநல்லூர் யூனியன் முன்னாள் துணை சேர்மன். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 8ம்தேதி காலை வெளியப்பன் மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த பாலமுருகன் உட்பட 5 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி முத்துப்பாண்டி மகன் பாலமுருகன், வெள்ளத்துரை மகன் கெவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோயில் கொடை மற்றும் திருமண விழாவில் எங்களுக்கு முதல் மரியாதை கிடைப்பதை தடுத்து வந்தார்.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கோயில் கொடை விழாவில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டோம். தொடர்ந்து எங்களுக்கு எதிரான வேலைகளில் வெளியப்பன் ஈடுபட்டு வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை கொல்வதற்கு திட்டமிட்டோம். நாங்கள் அவர் எங்கு எல்லாம் சென்று வருகிறார், என்று ஒரு வாரம் நோட்டமிட்டு திட்டமிட்டு, அதிமுக நிர்வாகியான வெளியப்பனை வெட்டிக்கொன்றோம் என வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை போலீசார் பிடித்து விடிய, விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சங்கரன்கோவில் அருகே அதிமுக நிர்வாகி கொலை முதல் மரியாதையை தடுத்ததால் வெட்டிக்கொன்றோம் appeared first on Dinakaran.