- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- காரைக்குடி
- முதல் அமைச்சர்
- சிவகங்கை மாவட்டம்
- விளையாட்டு மேம்பாட்டுத் துறை
- தின மலர்
காரைக்குடி: முதல்வரின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு முதல்முறையாக அரசு வேலை வழங்க உள்ளோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்கு ஊக்கத்தொகையாக முதல்வர், விளையாட்டு போட்டிக்கு செல்லும் முன்பே ரூ.7 லட்சம் வழங்கினார். அதில் 4 பேர் வெற்றி பெற்று பதக்கத்துடன் திரும்பி வந்துள்ளனர். முதல்வர் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்குவார். உலகம் வியக்கும் வகையில் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக பார்முலா 4 இரவுநேர கார் பந்தயம் சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் முதல்முறையாக நடத்தி காட்டப்பட்டது. அந்த போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி பதக்கம், 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் தமிழ்நாடு முதல்முறையாக இரண்டாவது இடத்தை பெற்றது. விளையாட்டு துறையில் தமிழ்நாட்டின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். விளையாட்டு மேம்பாட்டுத்துறை எடுத்துவரும் முயற்சிகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்தும் பாராட்டு குவிந்துவருகிறது. தமிழ்நாடு சாம்பியன் பவுன்டேஷன் துவங்கப்பட்டு ஏராளமான ஏழை, எளிய மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்படுகிறது.
சர்வதேச அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு முதல்வர் 3 வருடங்களாக உயரிய ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார். மூன்று வருடத்தில் 1,300 வீரர்களுக்கு ரூ. 31 கோடிக்கு மேல் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறையில் வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். முதல்வரின் சீரிய நடவடிக்கையின் காரணமாக முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு முதல்முறையாக அரசு வேலை வழங்க உள்ளோம். இவ்வாறு பேசினார்.
* உலகக் கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் இத்தாலி செல்வதற்கு உதவிய உதயநிதிக்கு வீரர்கள் நன்றி
மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சந்தோஷ், விஷால் ஹர்ஷத், ஜெய்ஸ்ரீ, ரேஷ்மாஸ்ரீ, ராஜதுரை மற்றும் கோகுல். இவர்கள் கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஒரு ஸ்கேட்டிங் அகடாமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் 7 பேரும் கடந்த மாதம் சண்டிகரில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் இத்தாலியில் நடைபெறும் உலகக் கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி, ரோலர் ஸ்கேட்டிங் டெர்பி போட்டிக்கு தேர்வாகினர். இவர்கள் இத்தாலி செல்ல உதவி செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அமைச்சரும் முன்வந்து இவர்கள் மதுரையில் இருந்து இத்தாலி சென்று திரும்பி மதுரை வருவது வரையுள்ள செலவுக்கான நிதியுதவியை செய்துள்ளார்.
இதையடுத்து வீரர்களை இத்தாலிக்கு வழியனுப்பும் விழா, கடச்சனேந்தலில் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் வீரர்கள் விமானம் மூலம் இத்தாலி சென்றனர். இதுகுறித்து வீரர்கள், வீராங்கனைகள் கூறுகையில், ‘‘இத்தாலி செல்ல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிதி உதவி கேட்டிருந்தோம். இதை ஏற்று அமைச்சரும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவருக்கு வீரர்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்’’ என்றனர்.
The post 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு வேலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.