×
Saravana Stores

ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி: ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்து. இந்த வழக்குகள் இன்று (செப்.10) நீதிபதிகள் ஏகே ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையும் மூடி சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு சரமாரியாக கேள்வியெழுப்பினர். இப்படியான ஒரு பிரச்சினை இருப்பதை ஹேமா அறிக்கை வெளிப்படுத்திய பின்பு, இது குறித்து அரசு எடுத்திருக்கும் குறைந்தபட்ச நடவடிக்கை என்ன? திரையுலகில் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ன செய்துள்ளீர்கள்?. பெண்கள் அதிகம் வசிக்கும் நம்மை போன்ற ஒரு மாநிலத்தில் இப்படியான நிலைமை கவலையளிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொள்ளும்போது நீங்கள் மவுனம் காப்பது ஏன்?” என சரமாரியாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த 2021-ம் ஆண்டே காவல்துறை தலைவரிடம் சமர்பிக்கப்பட்ட போதிலும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசின் இந்த செயலற்ற தன்மை அதிர்ச்சி அளிக்கிறது என நீதிபதிகள் கூறினர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு புலனாய்வு குழு இன்னும் முழுமையாக ஹேமா கமிட்டி அறிக்கையை பார்க்கவில்லை என தெரிவித்தது. இதையடுத்து நீதிபதிகள், “ஹேமா கமிட்டியின் திருத்தப்படாத மொத்த அறிக்கையும், சிறப்பு புலனாய்வு குழுவிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

The post ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Hema Committee ,Special Investigative Committee ,SIT ,Kochi ,Dinakaran ,
× RELATED மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு