திருமலை: பொதுத்தேர்தலின்போது வாகன சோதனையில் பிடிபட்ட ரூ50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பொக்லைன் ஏற்றி அழித்தனர். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஆவணங்களின்றி கொண்டு சென்ற அதிகளவு பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி குண்டூர் மாவட்டம் முழுவதும் நடத்திய வாகன சோதனையில் ரூ50 லட்சம் மதிப்புள்ள 24,031 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்த மதுபானங்களை அழிக்கும் பணி நேற்று நடந்தது.
நல்லச்செருவில் உள்ள குப்பைக்கிடங்கில் மதுபானங்களை வரிசையாக தரையில் அடுக்கிய போலீசார், காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் அவற்றை பொக்லைன் மூலம் ஏற்றி அழித்தனர். இதனையறிந்த சுற்றுவட்டார பகுதியில் இருந்த மதுபிரியர்கள் அங்கு குவிந்தனர். மதுபாட்டில்களை தங்களது கண்ணெதிரே நொறுக்குவதை கண்டு ஏக்கத்துடன் பார்த்தனர். சிறிது நேரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். குறைந்தளவு போலீசார் அங்கு இருந்தனர். இதனை கண்ட மதுபிரியர்கள், மதுபாட்டில்களை போட்டி போட்டு அள்ளினர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனாலும் மதுபிரியர்கள், பாட்டில்களை எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ,50 லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு appeared first on Dinakaran.