டெல்லி: குற்ற வழக்கில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள் மீது வேறொரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவர் அதிலிருந்து முன்ஜாமீன் பெற முடியுமா?. அல்லது அதில் வேறு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்ற அடிப்படையில் தனியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இவ்வழக்கை விரிவாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ‘ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள குற்றவாளி, மற்றொரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீனுக்காக விண்ணப்பித்து அதனை பெறலாம்.
அதில் சட்ட சிக்கல்கள் எதுவும் கிடையாது. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், அந்த குற்றத்தில் கைது செய்யப்படாமல் இருக்கும் வரையில் அவருக்கு முன்ஜாமீன் பெறுவதற்கு உரிமை உண்டு. ஒரு வழக்கில் காவலில் இருப்பதால், வேறு ஒரு வழக்கில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்த முடியாது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மற்றொரு குற்றத்தில் ஈடுபட்டு காவலில் இருந்தால், அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு செஷன்ஸ் நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது. அப்படி நடத்துவது என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதாகும். அதேபோல் தடுப்பு காவலில் இருக்கும் போது, அடுத்தடுத்து குற்றங்களில் முன்ஜாமீன் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்ய முடியாது’ என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.