சென்னை: தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சம் அனுமதித்து இளநிலை/முதுகலை பொறியியல், முதுகலை தொழில் படிப்புகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமையான மாணவர் ஆராய்ச்சித் திட்டங்களை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வாயிலாக வேளாண்மை, உயிரியல், வேதியியல், பொறியியல், சுற்றுப்புறவியல், மருத்துவம், கால்நடையியல், இயற்பியல் மற்றும் மற்றும் சமூக அறிவியல் போன்ற பிரிவுகளில் செயல்படுத்த ரூ.10,000 வரை நிதியுதவியாக வழங்குகிறது.
மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டங்கள் வல்லுநர்களால் புதுமை மற்றும் உண்மைத்தன்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது, சமூகப் பிரச்சினைகளுக்கான பயன்பாடு மற்றும் பொருந்தக்கூடிய தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாணவர்களிடையே உள்ள அபரிமிதமான திறமைகள் நமது மாநிலத்தின் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வு காண பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாணவர் கண்டுபிடிப்புகள், வடிவமைப்பு, யோசனைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழ்களில் வெளியிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். இத்திட்டம் மாணவர் சமுதாயத்தை அறிவியல் மனப்பான்மையை நோக்கித் தூண்டுகிறது. இந்த நிலையில் ஒப்புதல் பெறப்பட்ட 1010 மாணவர் ஆராய்ச்சி திட்டங்கள் மன்றத்தின் இணையதளத்தில் www.tanscst.tn.gov.in < http://www.tanscst.tn.gov.in > பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ.10,000 நிதியுதவி: உயர்கல்வித் துறை தகவல் appeared first on Dinakaran.