தேனி, செப். 7: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்ய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அருகே கோட்டூரில் உள்ள பள்ளிவாசல் தெருவில் குடியிருப்பவர் கள்ளழகர் மகன் அறிவுடையான். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவரை மீட்டனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் அறிவுடையான் கூறியதாவது: கோட்டூரில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி எட்டு வயதில் மகள் உள்ளார். என் தந்தை பெயரில் இருந்த வீட்டை என் பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளேன்.
இந்நிலையில் இதே கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பட்டாவுக்கு பணம் தரவேண்டும் என மிரட்டி வருகிறார். என் தாயார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கை,கால் செயலிழந்து என் பராமரிப்பில் இருந்து வரும் நிலையில் பட்டாவுக்கு பணம் தரவேண்டும். இல்லையெனில் உன்னையும், குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என பழனிசாமி மிரட்டி வருகிறார். இதுகுறித்து நடிவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தார். இது குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.