புதுடெல்லி: குழந்தைகளுக்கு எதிராக கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபடுவோருக்கு கண்டிப்பாக கருணை காட்ட முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த போலி சாமியார் ராமகிருஷ்ணன் என்பவரிடம் குறி கேட்பதற்காக தனது இரண்டு குழந்தைகளை பெண்மணி ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே எச்.ஐ.வி பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த அந்த போலி சாமியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அங்கு சென்ற குழந்தைகளுக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின்கீழ் போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட போலி சாமியார் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அசமனுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி சாமியாரின் வழக்கை விரிவாக படித்து பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பரவ காரணமாக இருந்த போலி சாமியாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான கொடூர குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கண்டிப்பாக எந்தவிதத்திலும் கருணை காட்ட முடியாது. மேலும் போலி சாமியாருக்கு ஜாமீன் வழங்கவும் முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post குழந்தைகளுக்கு எதிரான கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கருணை காட்டவே முடியாது: போலி சாமியார் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.