புதுடெல்லி: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளனர். இதனையொட்டி அவர்கள் புதனன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார்கள். அவர்கள் இருவரும் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை ராஜாஜி மார்க்கில் சந்தித்து இருவரும் கட்சியில் இணைந்தனர்.
இருவரும் காங்கிரசில் இணைந்த நிலையில் ஒருவர் மட்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவரா அல்லது இரண்டு பேரும் போட்டியிடுவார்களா என்பது விரைவில் தெரியவரும் என்று காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 8ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். ஆளும் பாஜவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஆம் ஆத்மி, சமாஜ்வாடிஉள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. எனவே ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. ரயில்வேயில் இருந்து ராஜினாமா: இதற்கிடையே வடக்கு ரயில்வேயில் சிறப்பு அதிகாரியாக இருந்த வினேஷ் போகத் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
The post மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தனர் appeared first on Dinakaran.