×

சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் என உலகம் போற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழ் வழியில் படித்தது ஆளுநருக்கு தெரியுமா?: சபாநாயகர் அப்பாவு கேள்வி

நெல்லை: சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் என உலகம் போற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பது ஆளுநருக்கு தெரியுமா என நெல்லையில் சபாநாயகர் அப்பாவு ேகள்வி எழுப்பியுள்ளார்.
வஉசி பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் வஉசி சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ‘தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டம் தரம் குறைந்துள்ளது. இதனால் மற்ற மாணவர்களுடன் போட்டி போட முடியவில்லை’ என்று ஆளுநர் கூறியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: இதுபோன்ற வார்த்தைகளை தமிழ்நாடு ஆளுநர் தவிர்ப்பது நல்லது என பலமுறை தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு பாடத்திட்டத்தை பற்றி ஆளுநருக்கு முழுமையாக தெரியுமா அல்லது அதை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றாரா என தெரியவில்லை. விண்வெளியில் சந்திரயான் – 3 தரை இறக்கப்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. அதன் இயக்குநர் வீரமுத்துவேல், அவரது வீட்டில் முதல் பட்டதாரி, தமிழ் வழிக் கல்வியில் அரசு பள்ளியில் படித்தவர். அவர் மட்டுமல்ல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவராக இருந்த சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.

அவரும் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து தான் உயர்ந்த பதவிக்கு வந்தார். மயில்சாமி அண்ணாதுரை இயக்குநராக இருந்தவர். இந்தியாவே பெருமைப்படும் வண்ணம் இன்று விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான பதவியில் இருப்பவர்கள் வீரமுத்துவேல், நிகர் சாஜி, நாராயணன். சந்திரயான் – 2 கீழே இறங்க முடியாமல் தரையில் விழுந்து விட்டது. இதை பிரதமரும் உடனிருந்து பார்த்தார். அப்போது சிவன் தலைவராக இருந்தார். ஏன் கீழே விழுந்தது என்பதை ஆராய இந்தியா முழுவதும் குழு அமைத்து 11 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஆய்வு செய்தது. இந்தக் குழுவின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் இருந்தார். அவரது தலைமையிலான குழு ஆய்வு செய்து சந்திரயான் – 3 வெற்றியை ஈட்டியது.இப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான விஞ்ஞானிகள் 90 சதவீதத்திற்கு மேல் தமிழ் வழியில் பயின்றவர்கள். அவர்கள் தான் உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். அவர்கள் தமிழ் வழி பாடத்தில் பயின்றவர்கள் என்பது ஆளுநருக்கு தெரியுமா? தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 விஞ்ஞானிகளையும் அழைத்து அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், ரூ.25 லட்சம் பண முடிப்பும் வழங்கி பட்டமளிப்பு விழாவில் 9 பேரின் பெயரில் விருது வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் சிவன் விருது, நாராயணன் விருது, வீரமுத்துவேல் விருது என விருதுகள் வழங்கப்படுகிறது. இவற்றை தாங்க முடியாமல் ஆளுநர் ரவி அப்படி சொன்னாரா என தெரியவில்லை. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

 

The post சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் என உலகம் போற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழ் வழியில் படித்தது ஆளுநருக்கு தெரியுமா?: சபாநாயகர் அப்பாவு கேள்வி appeared first on Dinakaran.

Tags : Governor ,ISRO ,Sivan ,Mylaswamy Annadurai ,Veeramuthuvel ,Nellai ,Speaker ,Appa ,Vausi ,Mani Mandapam ,Mayilsamy Annadurai ,
× RELATED இந்தியாவிலேயே தலைசிறந்தது...