- பொன்னேரி
- குருவிமேடு
- கொண்டக்கரை ஊராட்சி
- மீயெகூர்
- இந்திய எண்ணெய் நிறுவனம்
- Meenjur
- திருவள்ளூர்
- தின மலர்
பொன்னேரி: மீஞ்சூர் அருகே கொண்டக்கரை ஊராட்சி குருவிமேடு பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுடுகாட்டு இடத்தை மீட்டுத்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டக்கரை ஊராட்சியில் அடங்கியது குருவிமேடு கிராமம். இக்கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கொண்டக்கரை ஊராட்சியில் இருந்து குருவிமேடு வரை சுமார் 15க்கும் மேற்பட்ட கன்டய்னர் யாட், பேக்கிங் எக்ஸ்போர்ட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனங்களைச் சுற்றி 3 கிமீ தூரத்திற்கு இதுவரை இந்நிறுவனங்கள் சாலை அமைக்கவில்லை. நிறுவனங்களைச் சுற்றி சாலை அமைக்க ஊராட்சியிடம் நிறுவனம் நிதி கொடுத்ததாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை சாலை போடப்படவில்லை. இதனையடுத்து, நிறுவனங்களைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து அல்லது மினி பஸ், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுப்பாரெட்டி பாளையம் மற்றும் வெள்ளிவாயல் சாவடி அரசு பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் மாணவர்கள் சுமார் 3 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், குருவி மேடு கிராம சுடுகாடு எரிமேடு இருந்த இடத்தை அங்குள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் ஆயில் கழிவுகளை கொட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை தகனம் செய்ய சுடுகாடு இல்லாததால் சாலையோரத்திலேயே சடலத்தை எரிக்க உறவினர்களும், பெரியவர்களும் முடிவு செய்தனர்.
இது சம்பந்தமாக கிராம மக்கள் தாசில்தார் முதல் மாவட்ட கலெக்டர் வரை கோரிக்கை மனு கொடுத்தும், புகார் செய்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. 2 முறை கம்பெனி நிர்வாகம், பொன்னேரி வருவாய் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுடுகாட்ைடை நிறுவனத்திடம் இருந்து மீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.