×

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: காவல்துறை உயர் அதிகாரி பணம் தர முன்வந்ததாக மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தை மறைக்க காவல்துறையினர் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி.கர். அரசு மருத்துவமனையில் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வழங்க கோரி கொல்கத்தாவில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஆர்,ஜி,கர். மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர்கள் தொடக்கத்தில் இருந்தே இவ்வழக்கை மூடி மறைக்க மேற்குவங்க காவல்துறை முயன்று வருவதாக குற்றம் சாட்டினர்.

மகளின் உடலை பார்க்க தங்களை அனுமதிக்காமல் காவல் நிலையில் காக்க வைக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். உடற்கூறாய்வுக்கு பின்பு மகளின் உடலை ஒப்படைத்த போது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தங்களுக்கு லஞ்சம் தர முன்வந்ததாக குற்றச்சாட்டிய கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளனர். பெண் மருத்துவரின் கொலையை மறைக்க காவல்துறை பணம் தர முன்வந்ததாக பெற்றோரின் குற்றச்சாட்டு கொல்கத்தாவில் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: காவல்துறை உயர் அதிகாரி பணம் தர முன்வந்ததாக மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Tags : Kolkata ,R. ,R. G. Gar ,Dinakaran ,
× RELATED முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு