×
Saravana Stores

‘சர்வமத சம்மத சாயி’

ஒன்று என்று கூறினால் ஒன்றேயாகும்; பல என்று கூறின் பலவாகும்; இத்தன்மை உடையதல்ல என்று கூறினால் அவ்வாறே ஆகும்; இன்ன தன்மை உடையது என்று கூறினால் அந்தத் தன்மை உடையதாய் இருக்கும்; இல்லை என்று சொன்னால் இல்லாததாகும்; உள்ளது என்று கூறினால் உள்ளதே ஆகும்; இப்படிப்பட்ட இறைவனது நிலை பெரிதாயுள்ளது; அற்ப அறிவுடைய சிற்றறிவினராகிய நாம் இவ்வுலகில் இறை நிலையை அறிந்து உய்வு பெறும் வழி யாது?

‘ஒன்றே என்னின், ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின், பலவே ஆம்
அன்றே என்னின், அன்றே ஆம்
ஆமே என்னின், ஆமே ஆம்
இன்றே என்னின், இன்றே ஆம்
உளது என்று உரைக்கின், உளதே ஆம்
நன்றே, நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா’

எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளையும், அவனை அவனுடைய அருட்கண் கொண்டே காணக்கூடும் என்ற உண்மையையும், பரம்பொருள் சமயங்கட்கு அப்பாலானது என்பதையும் அதுவே இராமனாக அவதரித்த செய்தியையும் தெள்ளிய மொழிகளால் அழகுற விளக்குகிறார் கம்பர்.உலகில் உள்ள ஒவ்வொரு சமயமும் இறைவனது ஒவ்வோர் அங்கமாய் விளங்குகின்றது என்னும் உண்மை ஒப்புக் கொள்ளப்படின் நாம் எந்த சமயத்தையும் புறக்கணித்தல் இயலாது. எல்லாச் சமயங்களும் இறைவனது அருளாலே நிலவுகின்றன.

எல்லாச் சமயங்களும் இறைவனையே காண முயலுகின்றன. பல திறப்பட்ட மக்களின் மனப்பான்மைக்கு ஏற்றவாறு சமயநெறிகளும் பலவாய் அமைந்துள்ளன என்னும் பரந்த நோக்கம் ஒவ்வொருவர் மனத்திலும் விளங்கித் தோன்ற வேண்டும்.சீரடி பாபா சமய ஒருமைப்பாட்டின் உயிரோவியம் ஆவார். எல்லா மதத்தினர்களிடமும் இழைந்தோடும் ஒருமைப்பாட்டை, தன்னுடைய வாழ்க்கையின் பூரணம் வரை கடைபிடித்து வந்தார். பிறவியாலோ, வளர்ப்பாலோ, அனுஷ்டானத்தாலோ எந்த ஒரு மதத்தையும் பாபா பின்பற்றவில்லை.

எல்லா மதங்களின் அம்சங்களையும் அவர் போதித்தார். அப்போது நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் மதங்களுக்குள் வேற்றுமை மனப்பான்மையை வளரச் செய்து மேன்மேலும் வலுப்பெறச் செய்து வந்தனர். இவற்றையெல்லாம் மீறி மதங்களின் ஒற்றுமையைக் காக்க மதமாற்றங்கள் அல்லது சகிப்பின்மை ஆகியவற்றால் ஏற்படக்கூடிய மனக்கசப்பை மாற்றுவதில் கவனம் செலுத்தினார் பாபா.

ஒரு சந்தர்ப்பத்தில் மதம் மாறிய ஒருவரை பாபாவிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, அவரின் கன்னத்தில் அறைந்து ‘உன் அப்பனை மாற்றி விட்டாயா?’ என்று கேட்டு கோபமடைந்தார். அந்த நபர் எவ்வளவோ கேட்டும் அவரை மசூதிக்குள் நுழைய பாபா அனுமதிக்கவில்லை. பாபாவின் பொதுவான கொள்கை எல்லாச் சமயங்களும் உண்மையானதே. ஒவ்வொரு சமயமும் உன்னதமான உயர்ந்தோர்களால் போதிக்கப்பட்டவை.

அதன்படி அவரவர் வழக்கப்படி விசுவாசம், குரு, சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தால் தான் எல்லாச் சமயங்களும் ஒன்றுபட முடியும் என்று கருதியவர். எல்லாச் சமயங்களும் ஒன்றுபட வேண்டியது அன்பு என்னும் ஒரு நியதியின் கீழ்தான் என்பதில் உறுதியாக இருந்தார்.சிலர் பாபாவை யோகி என்றனர்; சிலர் ஞானி என்றனர்; சிலர் பக்கிரி என்றனர்; சிலர் வேடதாரி என்றனர். சிலர் பிரம்மம் அல்லது இறைவன் என்றனர்.

ஆக பாபாவின் அந்தரங்கத்தை யாரும் அறியார். அவருடைய நிலை ஸித்த அவஸ்தா. ஒவ்வொருவரும் அவரவர் அவரை எப்படி நினைக்கின்றனரோ  அவ்வாறே காண்கின்றனர்.‘‘யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம்’’ எந்த வழியில் ஒருவன் என்னிடம் சரண் புகுந்தாலும், அந்த வழியிலேயே நான் அவனை ஏற்கிறேன் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வாக்கு.

சீரடியின் அமைதியான சூழ்நிலை, அரசியல் மற்றும் வேறு எந்த வகையான சர்ச்சைகளால் ஒரு போதும் பாதிக்கப்பட்டத்தில்லை. குருதேவரிடம் காட்டும் பக்தி அல்லது நேசம் எனும் ஒரு பொதுவான பிணைப்பைத் தான் பாபா வலியுறுத்தி வந்தார். ‘குருவின் முன்னிலையில் எந்தவித சாதனையோ, படிப்போ இல்லாமல் முற்றிலும் அவருடைய அருளாலே
ஆத்மானுபவம் என்னுளே பளிச்சிட்டது.

குருவருள் ஒன்றே நமது சாதனை. அதன் பயனாக ஞானம் பிறக்கிறது’ என்று குருவின் மகிமையைச் சொல்வதன் மூலம், அனைவருக்கும் குரு அல்லது வழிகாட்டி தேவையென்பதை உணர்த்திக் கொண்டேயிருந்தார். இந்த குரு பக்தி எல்லாச் சமயங்களின் சாரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குரு பக்திம் ஸதா குர்யாச்ச்ரேயஸே பூயஸே நர: I
குருரேவ ஹரி: ஸாக்ஷேந் நான்ய இத்யப்ரவீச் ச்ருதி: II
குரு வக்த்ராத்து லப்ப்யேத ப்ரத்யக்ஷம் ஸர்வதோமுகம் I

‘‘உயர்வற உயர்நலம் எய்த குரு பக்தியை எப்பொழுதும் செய்ய வேண்டும். குருவே பிரத்யக்ஷமான ஹரி என்று வேதம் கூறுகிறது. எங்கும் உள்ள பரம்பொருளைக்குருவின் உபதேசத்தால் பிரத்யட்சமாகக் காணலாம்’’ என்று ‘குருவருள்’ பற்றி ப்ரஹ்ம வித்யோபநிஷத் கூறுகிறது.இந்தியச் சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொண்டு, அரசியல் சர்ச்சைகளைத் தவிர்த்து தேசபக்தியையும் ஊக்குவித்தார் பாபா. தம் முற்பிறவி பற்றிக் கூறும்போது இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் தாம் பங்கு பெற்றதாக ஒருமுறை குறிப்பிட்டார். ‘என்னுடைய காக்கை வந்து விட்டது (மேரா கபலா ஆலா)’ என்று பாபாவால் வரவேற்கப்பட்ட அப்துல் பாபாவிடம் இங்கிலாந்து நாட்டில் சில ஆண்டுகளில் மாறப் போகும் ஆட்சியாளர்களை முன்னிட்டு, இந்திய ஆட்சியில் மாறுதல் ஏற்படும் என்பதை குறிப்பாக உணர்த்தினார். அந்த வரிசையில் ஒன்பதாவது அல்லது பத்தாவது ஆட்சியாளரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

இந்தியாவின் சுயராஜ்யம் குறித்து பாலங்காதர திலகர், ஜி.எஸ். கபர்தே, கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோர் பாபாவைத் தரிசனம் செய்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறலாம். இந்நிகழ்ச்சி கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சுயசரிதையிலும் (Experience of A Pilgrim Soul), சுத்தானந்த பாரதியார், ஆச்சார்யா. E. பரத்வாஜ் (SAIBABA THE MASTER நூலின் ஆசிரியர்) அவர்களுக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிடப்படுகிறது.

லக்னௌ காங்கிரஸ் கூட்டம் நடந்து கொண்டிருந்தது (டிசம்பர் 1916). பாலகங்காதர திலகர், பண்டித மதன் மோஹன் மாளவியா, ஜி.எஸ். கபர்தே ஆகியோர் அதில் கலந்துகொண்டனர். அப்போது சபைக் கூட்டத்தில் ஒரே இரைச்சலாக இருந்தது. எல்லோரும் உரக்க வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். கூச்சலும் குழப்பமும் நிறைந்த அக்கூட்டத்தைப் பார்த்து, சுத்தானந்த பாரதியார், ‘இத்னா ஆவாஸ் ஸே ஸ்வராஜ் கபி நஹி மிலேகா’ (இத்தகைய இரைச்சலினால் சுய ராஜ்யத்தை ஒரு போதும் அடைய முடியாது) என்றார்.

‘பின் சுயராஜ்யம் எப்படிக் கிடைக்கும்’ என்று கேட்டார் திலகர்.‘மஹாத்மாக்களின் நிறைவான ஆசியால்’ என்றார் பாரதியார்.‘அத்தகைய மஹாத்மா எங்கே இருக்கிறார்?’’‘சீரடியில் இருக்கிறார். அவர் தான் சாயிபாபா’ என்று பாரதியாரும் கபர்தேயும் ஒரே குரலில் கூறினார்கள்.சில நாள்கள் கழித்து காலை 7 மணிக்கு அவர்கள் அனைவரும் சீரடி சென்றனர். பாபா வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தார். பாபா, சுத்தானந்த பாரதியாரைக் கூப்பிட, பாரதியார் ஒரு ஹிந்திப் பாடலைப் பாடினார். பாடலைக் கேட்ட பின்பு, ‘இத்னா ஆவாஸ் ஸே ஸ்வராஜ் கபி நஹி மிலேகா’ என்று கூறினார் பாபா. அனைவருக்கும் ஆச்சரியம்.

‘பின் எவ்வாறு கிடைக்கும்’ என்று கேட்டார் திலகர்’.‘போய்த் தூங்கு. அதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் வருவான்’ என்று பதில் சொன்னார் பாபா. (பாபா குறிப்பிட்ட காலத்தில் தான் காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). பாபா கபர்தேவைப் பார்த்து பகவத்கீதையின் 12 ஆம் அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார். பிறகு, ‘இது தான் வழி.

அல்லா அச்சா கரேகா (ஆண்டவன் உதவிடுவான்). சுப் ரஹோ (மௌனமாய் இரு)’ என்றார். திலகரிடம், ‘உன்னை அர்ப்பணித்துக் கொண்டு சோதனைகளைத் தாங்கிக் கொள். தியாகம் ஒருபோதும் வீணாவதில்லை. ஆண்டவன் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டுவிடு. மெளனமாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிரு’ என்றார். சந்திப்பின் நிறைவில் ’ஆன்மாவின் ஆழத்திலிருந்து பேசும் யாவருக்கும் உரிய ஒரு மஹான் இவர்’ (HE is a Saint for all who speaks from the Soul) என்று திலகர் சொன்னார்.

அதன்பிறகு சுத்தானந்த பாரதியார் சீரடியில் சில நாட்கள் தங்கி பாபாவின் தரிசனத்தையும் உபதேசங்களையும் பெற்றார். ‘அப் அப் (இப்பொழுதும்), ஜப் ஜப் (எப்பொழுதும்), தப் தப் (தவம் செய்), சுப் சுப் (மௌனமாயிரு) என்று பாபா அடிக்கடி சொன்னதாக சுத்தானந்த பாரதியார் தம் குறிப்புகளில் குறிப்பிடுகிறார்.உண்மையில் பாபாவிடம் வந்த மக்களில் மிகப் பெருமளவினர் உயர்ந்த தத்துவ ஞானத்தைப் புரிந்து கொள்ளத் தகுதியானவர்கள் அல்ல. பொதுவாக அவர்கள் சாமான்யமான அறிவு படைத்த சாதரண மக்கள். அவர்களுக்கு நேர்ந்த கஷ்டங்கள் காரணமாகவோ அல்லது பாபாவிடம் அவர்களுக்கு இருந்த பற்றின் காரணமாகவோ வந்தவர்கள்.

அவர்களுக்குத் தத்துவ ரீதியான நுண்மையான வழிமுறைகள் பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான், பாபாவிடம் சென்றால் அனைத்தும்  கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் தான். இன்றைய காலச் சூழ்நிலையிலும் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பாபாவைப் பார்க்க பக்தர்கள் கூடுகிறார்கள். அவர்களிடத்தில் சித்தாந்தங்கள், தத்துவங்கள் எதுவும் இல்லை. பக்தியும் விரதமும் கொண்டு வழிபடுபவர்களே அதிகம்.

அத்தகைய நிலையில் ஏற்கனவே இருக்கும் ஏதேனும் ஒரு தத்துவத்திற்குள் அவரைக் கொண்டு வந்து, அது எதிரானது, இணக்கமானது, பிணக்கமானது, சரியானது என்ற வாதங்கள் வேண்டாதவை. ஆன்மிக வாழ்வில் படிப்படியாக பக்தர்கள் முன்னேறும் போது அவர்களே அவசியமானதைத் தெரிந்து கொள்வார்கள். அதுவே போதுமானது. உண்மையான உண்மைப் பொருளை, மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை.

‘‘பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரிலாது எனைச் செய்து விட்டாள்
துன்பம் என்பதைக் கொய்து விட்டாள்’’

மகாகவி பாரதியாரின் ‘மஹாசக்தி’ கவிதை, பாபாவின் ‘அருட்சக்தி’க்கும் பொருந்துமன்றோ?

The post ‘சர்வமத சம்மத சாயி’ appeared first on Dinakaran.

Tags : Sai ,
× RELATED இசை பரதம்