×
Saravana Stores

நீர்வள ஆதார துறையின் சார்பாக வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணி: கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர், செப். 5: திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி வட்டத்தில் ₹350 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு நடத்தினார். மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயலின் காரணமாகவும் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை வெள்ள சேதங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ₹350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீர்வள ஆதார துறையின் சார்பாக பல்வேறு வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாகவும் பல்வேறு பணிகள் எடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. இதில் குறிப்பாக ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பாடாதவாறு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தத்தமஞ்சி கிராமத்தில் ஆய்வு பணி நடைபெற்றது.

அப்போது கலெக்டர் கூறியதாவது: ஆரணி ஆற்றில் ₹20 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள், கரையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் மூலம் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு பாதுகாப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர சோழவரம் ஏரியில் ₹40 கோடி மதிப்பில் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் திருநின்றவூர் ஏரி, சேக்காடு போன்ற பகுதிகளில் கொசஸ் தலை ஆற்றுப்பகுதியில் இதே பணிகள் எடுக்கப்பட்டு கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர பெரும் மழையோ வெள்ள சேதமோ, புயலோ மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும்போது பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஆண்டாள் மடம் மற்றும் திருப்பாலைவனத்தில் உள்ள மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஆண்டு மழை வெள்ள காலங்களில் நமது திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், பொன்னேரி சப் கலெக்டர் வாஹே சங்கத் பல்வந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, நீர் வளத்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்யநாராயணன், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய ஆணையர் க.வெங்கடேசன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post நீர்வள ஆதார துறையின் சார்பாக வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணி: கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Water Resources Department ,MLA ,Thiruvallur ,District Collector ,Prabhu Shankar ,Tiruvallur ,Avadi ,Ponneri ,North East ,Monsoon ,Mikjam ,Collector, MLA ,Dinakaran ,
× RELATED சென்னையில் தேங்கிய மழை நீர் இரவோடு...