புதுடெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த 10 நிறுவனங்களை அதானி குழுமம் வாங்கியதும் அந்நிறுவனங்களின் ரூ.62,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.16,000 கோடியை மட்டும் பொதுத்துறை பெற்றுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த 10 நிறுவனங்களை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன. இது குறித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எச்டிஐஎல் நிறுவனமும் ஒன்று.
இந்நிறுவனம் ரூ.7,795 கோடி கடன் வாங்கியிருந்த நிலையில், அதானி புராபர்ட்டீஸ் நிறுவனம் வெறும் ரூ.285 கோடி செலுத்தி வாங்கி உள்ளது. மீதமுள்ள 96 சதவீத கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் அழகான வார்த்தை ‘ஹேர்கட்’.இவ்வாறு 10 நிறுவனங்கள் ரூ.62,000 கோடி செலுத்த வேண்டிய நிலையில் அதானி குழுமம் ரூ.16,000 கோடியை மட்டும் செலுத்தி உள்ளது. பாக்கி 74 சதவீத கடனை பொதுத்துறை வங்கிகள் ஹேர்கட் செய்துள்ளன. பல்வேறு நிதி மோசடிகளால் குற்றம்சாட்டப்படும் அதானி லாபத்தை பெருக்க, அரசு அமைப்புகளே சலுகைகளை அள்ளித் தருகின்றன.இவ்வாறு கூறி உள்ளார்.
The post அதானி வாங்கிய 10 நிறுவனங்களின் ரூ.62 ஆயிரம் கோடி கடனுக்கு ரூ.16,000 கோடி மட்டும் வசூல்: மீதமுள்ள பாக்கி தள்ளுபடி appeared first on Dinakaran.