×

கட்டுப்பாடற்ற இறக்குமதி மூலம் இந்திய பொருளாதாரத்தில் தீங்கு விளைவிக்கும் சீனா: ஒன்றிய அரசின் மவுனம் குறித்து காங். கேள்வி

புதுடெல்லி: சீனாவில் இருந்து குடைகள், இசைக் கருவிகள் போன்ற பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக வெளியான அறிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பதிவிட்டிருப்பதாவது: தற்சார்பு எனக்கூறிக் கொள்ளும் இந்திய பொருளாதாரம், சீனாவின் இறக்குமதியை சார்ந்திருப்பது அதிகரிப்பதாக தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று இந்தியாவில் விற்கப்படும் குடைகளில் 96 சதவீதமும், இசைக்கருவிகள், பொம்மைகளில் 50 சதவீதமும் சீனாவைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

மின்னணு உதிரிபாகங்கள் போன்ற முக்கிய தொழில்களில், சீனாவின் இறக்குமதி 9 மடங்கு அதிகரித்துள்ளது. இது, 2016-17ல் 1.4 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து (ரூ.11,620 கோடி) 2023-2024ல் 12.1 பில்லியன் டாலராக (ரூ.1 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இது தவிர மருந்து பொருட்களின் இறக்குமதி 1.6 பில்லியன் டாலரிலிருந்து (ரூ.13,280 கோடி) 3.3 பில்லியன் டாலராக (ரூ.27,390 கோடி) இருமடங்காக அதிகரித்துள்ளது. உலகெங்கிலும் பல நாடுகள், கட்டுப்பாடற்ற சீன இறக்குமதிகளுக்கு எதிராக சுங்க வரி உள்ளிட்ட வரிகள் விதித்து வலுவான திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால் இந்தியாவிலோ, சீனாவால் நமக்கு எல்லையில் தேச பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தாலும் அதில் எல்லாம் கவனம் செலுத்தாத ஒன்றிய பாஜ அரசு டிக்டாக்கை தடை செய்வது போன்ற அற்பத்தனமான விஷயங்களில் கவனம் செலுத்தி, கட்டுப்பாடற்ற இறக்குமதியை அனுமதிக்கிறது. இதனால் உள்நாட்டு பொருளாதாரம் அழிவை சந்திக்கிறது. சீன இறக்குமதிகளால் இந்தியாவின் உற்பத்தி வெறுமையாக்கப்படுகிறது. ஆனால், எல்லையில் சீனா ஊடுருவவில்லை என சான்றிதழ் தந்த ஒன்றிய பாஜ அரசு, இதைப் பற்றி எல்லாம் பேசாமல் மவுனம் காக்கிறது. இவ்வாறு கூறி உள்ளார்.

The post கட்டுப்பாடற்ற இறக்குமதி மூலம் இந்திய பொருளாதாரத்தில் தீங்கு விளைவிக்கும் சீனா: ஒன்றிய அரசின் மவுனம் குறித்து காங். கேள்வி appeared first on Dinakaran.

Tags : China ,Kang ,Union govt ,New Delhi ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,Kong ,Dinakaran ,
× RELATED சர்க்கரை நோயை எலும்பு மஜ்ஜை சிகிச்சை...