விஜயவாடா: ஆந்திராவில் வெள்ளத்தில் மூழ்கடித்த கனமழை ஓய்ந்த நிலையில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான விஜயவாடாவில் மக்கள் உணவுக்காக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆந்திராவில் புரட்டி போட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை சீற்றத்திற்கு ஆந்திர மாநிலத்தில் மட்டும் இதுவரை 17 பேர் உயிரிழந்த நிலையில், 43,000க்கும் மேற்பட்டோர் 160க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மழை இல்லாத நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும் பாதிப்புக்குள்ளான விஜயவாடாவில் மீட்பு பணிகளும், நிவாரண உதவிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலமாக சென்று உணவு விநியோகித்து வருகின்றனர். படகுகள் செல்ல முடியாத பகுதிகளுக்கு உணவு, குடிநீர் வழங்க 6 ஹலிகாப்டர்கள், 30 ட்ரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வம்பே காலனியில் ஹலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வீசப்பட்டன. சேறும் சகதியுமாக நிறைந்த இடத்தில் மூட்டையில் கட்டி வீசப்பட்ட உணவை மக்கள் முண்டியடித்து சென்று எடுத்து சென்றது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மழை நின்றதால் விஜயவாடாவில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனால் தூய்மை பணிகள் மேற்கொள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்களும் அமைக்கப்படுகின்றன.
The post விஜயவாடாவில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள்: சேறும் சகதியுமான இடத்தில் முண்டியடித்து உணவை எடுத்துச்செல்லும் பரிதாபம் appeared first on Dinakaran.