×

வெள்ளெழுத்து பிரச்சனைக்கு கண்ணாடிக்கு மாற்றாக சொட்டு மருந்து : 15 நிமிடங்களில் பார்வைத் திறன் மேம்படுத்தும் மருந்தின் விலை ரூ.350

மும்பை : வெள்ளெழுத்து பிரச்சனை உள்ளவர்களுக்கு கண்ணாடிக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சொட்டு மருந்து அடுத்த மாதம் விற்பனைக்கு வர உள்ளது. நாற்பது வயதைத் தாண்டும்போது பார்வையில் ஏற்படும் குறைபாட்டினால் கருப்பாக இருக்கிற எழுத்துகள் பளிச்சென்று தெரியாமல் வெள்ளைப் பேப்பரோடு சேர்ந்து வெள்ளையாகத் தெரியுமாம். இதைத்தான் வெள்ளெழுத்து என்கிறோம். `தலைமுடி நரைப்பதைப்போல, வயதான காலத்தில் தோலில் சுருக்கம் விழுவதைப் போல, வெள்ளெழுத்துப் பிரச்னையும் வயதாவதால் வருவது தான். புத்தகம் படிப்பதற்கு கஷ்டம், புத்தகத்திலுள்ள சின்ன எழுத்துக்களைப் படிப்பதற்குக் கஷ்டம், சற்று குறைவான வெளிச்சத்தில் படிப்பதற்கு கஷ்டம், கம்ப்யூட்டரில் எழுத்துக்களைப் பார்ப்பதற்கு கஷ்டம், செல்போனில் நம்பரைப் பார்ப்பதற்கு கஷ்டம், கொஞ்ச நேரம் படித்தாலே நிறைய நேரம் படித்தது போன்ற ஒரு நினைப்பு. கண்களில் ஓர் அசதி, களைப்பு, எரிச்சல். இவைகள் எல்லாமே நாற்பது வயதை நெருங்கியவர்களுக்கும், நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கும் ஏற்படக்கூடிய வெள்ளெழுத்துப் பிரச்னையாகும்.

வெள்ளெழுத்துப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயம் கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு அளிக்கும் ‘பிரஸ் வியூ’ என்ற கண் சொட்டு மருந்தை மும்பையைச் சேர்ந்த ‘என்டோட் பார்மசூட்டிகல்ஸ்’ என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது, 40 முதல் 55 வயதுக்குட்பட்ட வெள்ளெழுத்து பிரச்னை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் என, அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சொட்டு மருந்தை பயன்படுத்துவதன் மூலம் 15 நிமிடங்களுக்குள் பார்வை திறன் மேம்படும் என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சொட்டு மருந்து காப்புரிமை பெற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த மருந்து ரூ.350க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளெழுத்து பிரச்சனைக்கு கண்ணாடிக்கு மாற்றாக சொட்டு மருந்து : 15 நிமிடங்களில் பார்வைத் திறன் மேம்படுத்தும் மருந்தின் விலை ரூ.350 appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Dinakaran ,
× RELATED விமானத்தில் 5 மணிநேரம் தவித்த பயணிகள்