சென்னை: பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து அறநிலையத்துறை, கலைமகள் சபா, பிஏசிஎல் தொடர்பான நிலங்கள், சொத்துகளை பதிவு செய்ய தடை உள்ளது. மேலும், வகிப்போருக்கு சொந்தமான ஆவணங்களின் பதிவு நடைமுறை, சதுப்புநில ஆவணங்களின் பதிவு தடை நடைமுறை, நீர்நிலைகளின் ஆவணப்பதிவு தடை குறித்தும் நீதிமன்ற உத்தரவுகள், தடையாணைகள் குறித்து விரிவாக பதிவு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மேற்காணும் நிலங்கள் தொடர்பான ஆவணப்பதிவுகள் நிகழாதவாறு தடுத்திட, கண்காணிக்க ஏதுவாக இத்துறையின் மென்பொருளில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் நிலையிலும், மாவட்டப்பதிவாளர், துணைப்பதிவுத்துறை தலைவர்கள் நிலையிலும், மேற்காணும் மென்பொருளில், உள்நுழைவில் அரசின் பொதுக் கொள்கைகளுக்கு எதிரானதும் மேலே பட்டியலிடப்பட்டதுமான சொத்துக்கள் தொடர்பான விவரங்களை தவறாது உள்ளீடு செய்து விழிப்புடன் பணியாற்றிட பதிவு அலுவலர்களுக்கு மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
இதை மீறுவதால் ஏற்படும் பிழைகள், விதி மீறல்கள், சட்ட சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், பதிவு அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகின்றன. எனவே, மேற்கண்ட வழிமுறைகளை தவறாது பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது. தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள் தடை செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட மென்பொருள் தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிறப்பு தணிக்கை மேற்கொண்டு தணிக்கை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கு தெரிவித்திட அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பதிவுத் துறையில் இந்து அறநிலையத் துறை இடங்களை பதிவு செய்தால் நடவடிக்கை: ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.