- கர்நாடக
- துணை முதலமைச்சர்
- சென்னை
- டி.கே.சிவகுமார்
- சென்னை கார்ப்பரேஷன்
- கர்நாடக மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை
- கூடுதல் தலைமைச் செயலாளர்
- உமாசங்கர்
சென்னை: சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை பார்வையிடும் விதமாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இந்த குழுவில், கர்நாடக மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் உமா சங்கர், பெருங்களூரு மாநர ஆணையாளர் துஷார் கிரி நாத், கர்நாடக மாநில துணை முதல்வரின் செயலாளர் ராஜேந்திர சோழன் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினர் முதல்கட்டமாக, ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் கண்காணிப்பு அறையை பார்வையிட்டனர். அப்போது கண்காணிப்பு அறையில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அதை தொடர்ந்து, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரக்கூடிய பயோ-சிஎன்ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் மற்றும் மாதவரத்தில் உள்ள இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை மணலியில் உள்ள பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 180 டன் காய்கறிக் கழிவு மற்றும் மாட்டுச்சாணம் மூலம் தினசரி 4000 மெட்ரிக் டன் பயோ கேஸ் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர். அதன்பின், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்த காட்சிப்படத்தை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட 50 அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் வந்துள்ளேன். திடக்கழிவுகள் உருவாகும் வழிகள் குறித்தும், அதிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிப்பு குறித்தும் அறிந்து கொண்டோம். தமிழக அரசின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டுக்கள். நாட்டில் திடக்கழிவு மேலாண்மை சவாலானதாக இருந்தாலும், சென்னை மாடல் நன்றாகவே உள்ளது. நாங்களும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசிடமிருந்து நாங்களும் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டோம். இவற்றை பின்பற்றி எங்கள் மாநிலத்தில் திடக்கழிவு மற்றும் தூய்மைப் பணிகளை மேம்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
* அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அரசு முறை பயணமாக நேற்று சென்னை வந்தார். சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பார்வையிட்டார். இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்துக்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நானும் நண்பர்கள். கூட்டணியில் உள்ளோம். இன்று நடைபெற்ற சந்திப்பு நண்பர்களுக்கிடையான சந்திப்பு. கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது சமூகவலைதள கணக்கை கையாள்வதற்கு மாதம் ரூ.54 லட்சம் செலவிடுகிறார் என்று கேட்கிறீர்கள். சித்தராமையா தனிமனிதர் மட்டுமல்ல. அவர்தான் கர்நாடக அரசு, அரசின் செயல் திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்காற்றுகிறது.
அதற்கு இந்த தொகை செலவிடப்படுவது பெரிதல்ல. கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படுவதால் பெண்கள் அதிகம் பலனடைகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், 2028ல் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதால் இந்த திட்டத்தை நிறுத்த முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு பெண்களின் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிட்டுள்ளோம். மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே அதிக பலன் கிடைக்கும். மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் சென்னையில் நேரில் ஆய்வு: ‘சென்னை மாடல்’ நன்றாக உள்ளதாக பாராட்டு appeared first on Dinakaran.