திருமலை: தொடர் மழையால் ஆந்திரா மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்பு பணிகள் 3வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி தீர்த்துள்ளதால், ஆந்திராவில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் மட்டும் விநாடிக்கு 10 லட்சம் கனஅடி வெள்ளம் கரையை தாண்டி ஓடுகிறது. இதனால், அதன் கரையோர பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக என்டிஆர் மாவட்ட தலைநகரான விஜயவாடா நகரத்தையொட்டி கிருஷ்ணா நதியும், பூதமேறு ஆறும் ஓடுகிறது. இந்த இரு ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விஜயவாடா நகரின் பெரும் பகுதியில் 3வது நாளாக நேற்றும் வெள்ளத்தில் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
நகரின் 50 சதவீத பகுதிகள் பல அடி வெள்ள நீரில் மூழ்கிக்கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆந்திராவில் பெய்த கனமழையால் சுமார் 20 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடா முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 17 பேர் இறந்துள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் இன்னும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் உட்புறத்தில் உள்ள பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களுக்கு இதுவரை உணவு,குடிநீர், மருந்து உள்ளிட்டவை எதுவும் சேர்க்க முடியவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனை இன்று 3வது நாளாக ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபுநாயுடு மீண்டும் தெரிவித்தார். குடியிருப்பில் சிக்கிய அனைவருக்கும் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேர்க்க அவர் தீவிரப்படுத்தியுள்ளார். சில இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் ஆங்காங்கே பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இன்று காலை விஜயவாடாவில் உள்ள மாநகராட்சி வார்டுகளில் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அளவிலான அதிகாரிகள் கொண்டு குழுவினர் மீட்பு பணிகளில் களம் இறங்கியதோடு அனைவருக்கும் உணவு, குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். முதல்வர் உத்தரவின்பேரில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதற்காக 6 ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மூலம் உணவு, தண்ணீர், பால், பழங்கள், பிஸ்கட், மருந்து விநியோகம் செய்யும் பணியில் தொடங்கியுள்ளது. இதுவரை 43,417 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு மீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 197 மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. என் டி ஆர் எப் மற்றும் எஸ் பி ஆர் எஃப் 48 குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளில் அவசர சேவைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் படகுகளில் தங்களது உறவினர்களை மீட்க வலியுறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரியுடன் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதால் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மனிதாபிமானத்துடன் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என நாடு முழுவதும் உள்ளோர் இங்கு உள்ளவர்களுக்கு முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
சகஜ நிலை திரும்பிய பிறகு இங்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து கணக்கிடப்பட்டு தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி உள்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் அறிக்கை சமர்ப்பித்து கூடுதல் நிதி கேட்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதேபோன்று தெலங்கானாவில் கம்மம், நல்கொண்டா, மகபூபாபாத், நாகர்கர்னூல், ஹனுமகொண்டா, முலுகு, பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள், பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளது. 16 பேர் இறந்துள்ளனர். 196 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு 64 கால்வாய்களில் உடைந்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை தற்போது குறைந்துள்ளதால் முதல்வர் ரேவந்த்ரெட்டி களத்தில் இறங்கி நிவாரண பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மழைக்கு 100 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், பயிர் சேதம் மேலும் பல கோடி இருக்கும் என அதிகாரிகள் கணக்கீடு செய்துள்ளனர்.
The post ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.