×

காதலிக்க மறுத்த சிறுமிக்கு மயக்க மருந்து குளிர்பானம் கொடுத்து பிளேடால் கிழிப்பு: முட்புதரில் வீசிய கொடூரம் வாலிபர்கள் வெறிச்செயல்

திருமலை: காதலிக்க மறுத்த சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வலுக்கட்டாயமாக கொடுத்து அவரை சரமாரி பிளேடால் கிழித்த வாலிபர் உள்பட அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகள் குறித்து கேட்க பள்ளிக்கு சென்றனர். வழியில் கிராமத்தின் அருகே உள்ள முட்புதரில் சிறுமியின் முனகல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது தங்களது மகள்தான் என தெரிந்தது. உடனே மகளை மீட்டபோது உடலில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சில் அழைத்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருப்பதி மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமி பள்ளிக்கு செல்லும்போது தன்னை காதலிக்கும்படி கூறி ஒரு வாலிபர் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதை ஏற்க சிறுமி மறுத்துள்ளார். தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் ஆத்திரமடைந்த சிறுமி, அந்த வாலிபரை தாக்கியுள்ளார். இதனால் அந்த வாலிபர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை கடத்தி சென்று மறைவான இடத்தில் வலுக்கட்டாயமாக மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்துள்ளனர். மயங்கி  விழுந்த அவரை பிளேடால் உடல் முழுவதும் கிழித்துள்ளனர். இதனால் சிறுமி மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். பின்னர் முட்புதரில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து திருப்பதி எஸ்பி சுப்பாராயுடு தலைமையில் போலீசார், வாலிபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று வாலிபர்கள் சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்; ரோஜா
திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பாதிக்கப்பட்ட சிறுமியை முன்னாள் அமைச்சர் ரோஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘கூட்டணி ஆட்சி பதவியேற்ற 120 நாட்களில் பெண்கள், சிறுமிகளை எரித்து கொலை செய்வது, தாக்குதல், பாலியல் பலாத்காரம் என 110 சம்பவங்கள் நடந்துள்ளன. உள்துறை அமைச்சர் சரியாக வேலை செய்யவில்லை என்று துணை முதல்வர் பவன்கல்யாண் கூறுகிறார். உள்துறை அமைச்சரை டம்மியாக வைத்து மாநிலத்தில் நடக்கும் பிரச்னைகளை அவர் மீது சுமத்தி வருகின்றனர். டிஜிபி முதல் எஸ்ஐ வரை சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் பட்டியல் தயாரித்து நியமித்து வருகின்றனர். லோகேஷ்க்கு பிடிக்காதவர்கள் மீது ரெட் புக் என வைத்து பழி வாங்கி வருகின்றனர். உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் போல் பணியாற்ற வேண்டும் என்று பவன்கல்யாண் கூறுகிறார். அவ்வாறு வேண்டுமென்றால் சந்திரபாபுவிடம் யோகிஆதித்யநாத் போல் வேலை செய்ய பவன்கல்யாண் சொல்ல வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவரை பதவி விலக சொல்லிவிட்டு பவன்கல்யாண் முதல்வரானால்தான் யோகிஆதித்யநாத் போல் செயல்பட முடியும். மோடியை தேடி சென்று நீங்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கிறீர்கள். ஆந்திராவில் நடக்கும் கொடுமைகளை தடுக்க ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஒரு டம்மி உள்துறை அமைச்சரை வைத்தால் பெண்களின் நிலை இப்படிதான் இருக்கும்’ என்றார்.

The post காதலிக்க மறுத்த சிறுமிக்கு மயக்க மருந்து குளிர்பானம் கொடுத்து பிளேடால் கிழிப்பு: முட்புதரில் வீசிய கொடூரம் வாலிபர்கள் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : AP ,Tirupati ,Mudputar ,
× RELATED ஆற்றுமணலை கடத்திய மணல் கொள்ளையர்களை...