×
Saravana Stores

2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!

சென்னை: 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுடன் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர்  திருவுருவச்சிலையும் வழங்கி சிறப்பித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞரின் கனவினை நிறைவேற்ற, ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில், 2006 இல் இந்திய மொழிகளுக்கான ஒன்றிய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் முதலமைச்சர் ஆவார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்து ‘கலைஞர் செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் ‘கலைஞரின் செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர்  திருவுருவச்சிலையும் அடங்கியதாகும்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அறக்கட்டளை தொடங்கப்பட்டபின் 2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் 22.01.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டன.

மேலும், 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை 22.08.2022 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டன. 2023ஆம் ஆண்டிற்குரிய விருது 05.09.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரால் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் முதலமைச்சரால் அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

21.06.1946இல் பிறந்த முனைவர் மா.செல்வராசன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இக்காலத் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழுலகம் நன்கறிந்த தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் மேற்பார்வையில் பல்கலைக்கழக நல்கை ஆணைய ஆய்வு ஊதியத்துடன் ‘பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர்’ என்னும் பொருள் குறித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் (1970-1974) ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றுள்ளதோடு, அருஞ்சிறப்புக்குரிய இந்த ஆய்வு நூலுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை முதற்பரிசையும், முழுப் பாராட்டையும் நல்கியுள்ளது.

“இளந்தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் என நான் செல்வராசனைக் கருதுகிறேன்” என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருத்துமிகு பாராட்டையும் பெற்றவர். முனைவர் மா.செல்வராசன் , பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் கலைகள், பாரதிதாசன் ஒரு பார்வை, இலக்கியத்தில் குறுக்கும் நெடுக்கும், இலக்கியத்தில் மெல்லுரை, நல்லோர் குரல்கள், வைகறை மலர்கள், கிளறல்கள், செம்புலப்பெயல் நீர், முரசொலி முழக்கம், வண்ணச்சாரல் வாழ்த்துக்கதிர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். செம்மொழித் தமிழ் வளர்ச்சிக்கு இலக்கிய ஆய்வு, படைப்பு இலக்கியம் என்னும் இரண்டு வகைகளிலும் இவர் ஆற்றியுள்ள தொண்டுகள் மிகவும் சிறப்புக்குரியதாகும். ஆய்வு நெறியாளராகப் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டிய சிறப்புக்குரியவர்.

இவர் மேற்பார்வையில் நிகழ்ந்த பல்கலைக்கழக ஆய்வுகள் 73. இவற்றுள் 54 ஆய்வுகள் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன், பேராசிரியர் க.அன்பழகன் முதலான திராவிட இயக்கப்படைப்பாளர்கள், அவர்களின் படைப்புகள் பற்றியவை ஆகும். அத்துடன், பல்வேறு தமிழியல் ஆய்வு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்தளித்த சிறப்புக்குரியவர். இவருக்கு 2024ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முதலமைச்சர் இன்று வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர். ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஔவை. ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன், இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

The post 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Artist Classic Tamil Award ,Dr. ,Chief Minister ,M.K. ,Selvarasan ,Stalin ,Chennai ,M.K. Stalin ,Tamil Nadu ,Chief Secretariat ,Central Institute of Classical Tamil Studies ,Dinakaran ,
× RELATED வரும் 11ம் தேதி முதல் பஸ்கள் இயக்கம்