×

அருப்புக்கோட்டை அருகே சாலை மறியல் போராட்டத்தில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: 4 பேரிடம் விசாரணை

விருதுநகர்: அருப்புக்கோட்டை, திருச்சுழியில் கொலை செய்யப்பட்ட காளிக்குமார் என்பவரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி பேச்சுவார்த்தை நடத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போராட்டக்காரர்கள், பெண் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார்(33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். காளிக்குமார் சரக்கு வாகனத்தில் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி – இராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே திடீரென காளிக்குமார் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.‌

காளிக்குமார் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்‌. தொடர்ந்து அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.‌

அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது ஒருவர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை இழுத்து, அவர்மேல் தாக்குதல் நடத்தினார். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து போலீசாரை மீறி காளிக்குமாரின் உறவினர்கள் திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அரசு மருத்துவமனை முன்பு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி நடந்த போராட்டத்தில் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post அருப்புக்கோட்டை அருகே சாலை மறியல் போராட்டத்தில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Virudhunagar ,Kalikumar ,Aruppukkottai, Thiruchuzhi ,Aruppukkottai Government Hospital ,DSP ,Gayatri ,
× RELATED டிரைவர் கொலையில் மறியலை தடுக்க முயன்ற...