நன்றி குங்குமம் தோழி
வங்கதேசத்தை நிறுவிய ‘வங்கத் தந்தை’ ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அன்பு மகள் ஷேக் ஹசீனா. இவர் அரசியல் வாழ்வின் கடைசி அத்தியாயம் சோகமாய் முடிய இவரே காரணம். பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப்போரில் களம் கண்ட வங்கதேச தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிவிப்பால், பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள் சேர்ந்து நடத்திய போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வங்கதேசத்தில் வெடித்தது.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையை புதுப்பிக்கக் கோரி ஜூலை 1 ல், பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். மாணவர்கள் முதலில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை முற்றுகையிட்டனர். கடந்த ஜனவரியில் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா, மாணவர்கள் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தைக் கடுமையாக கண்டித்ததுடன், அடக்குமுறைகளையும் ஏவினார்.
கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தின் பின்னணியில், இடஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றக்கோரி தொடங்கிய மாணவர் போராட்டம், தீவிர மக்கள் இயக்கமாக மாறியதில் இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. ஒன்று காவல்துறை மற்றும் அவாமி லீக் கும்பல்களின் ரத்தக்களரி அடக்குமுறை. இரண்டாவதாக, ஷேக் ஹசீனா எதிர்ப்பாளர்களை ‘ரசாக்குகள்’ என வர்ணித்தது.
வங்கதேச விடுதலைப் போரின் போது, வங்கதேசத்தில் மக்களைக் கொல்லவும், பெண்களை பலாத்காரம் செய்யவும் தயாராக இருந்த மேற்கு பாகிஸ்தான் வீரர்கள் தான் ‘ரசாக்’ என்று சொல்லப்பட்டனர். இந்த நிலையில்தான் ஷேக் ஹசீனாவின் தேர்தல் வெற்றி குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் இருந்தது. மாணவர்களின் ஜூலை போராட்டத்தை ஒடுக்க அரசு காவல்துறையைப் பயன்படுத்தியது நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியது.
ஆளும் கட்சியான அவாமி லீக்கின் விளையாட்டுக்குழு, காவல்துறையினருடன் இணைந்து போராட்டக்காரர்களை எதிர்கொள்ள முனைந்தது. இந்நிலையில் இரு தரப்பிலுமே மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்தது. ஆகஸ்ட் 4ல் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். காவல்துறையினரில் சிலரும் கொல்லப்பட்டனர். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் வங்க தேசத்தையே நிலைகுலையச் செய்து மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது.
பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டக் களத்தில் மிகத் தீவிரமாய் இறங்கினர். மாணவர்களும் மக்களும் காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றத் தொடங்கினர். தொலைக்காட்சி நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பிரதமரின் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றுவார்கள் என்பதை உணர்ந்த ராணுவ வீரர்களில் சிலர் ஹசீனாவுக்கு உதவியதால், விமானப்படை விமானத்தில் அவரால் தப்பிக்க முடிந்தது.
பிறகு பிரதமரின் இல்லம் சூறையாடப்பட்டதோடு, அவரின் தந்தையும் வங்கதேசம் உருவாகக் காரணமான ஷேக் முஜிபுர் ரகுமானின் சிலைகளும் போராட்டக் காரர்களால் உடைத்தெறியப்பட்டன. கலவரத்தையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பிவந்து தஞ்சம் புகுந்திருக்கிறார். இந்த நிலையில், ஷேக் ஹசீனாவால் கடந்த 2018ல் முதல் ஊழல் வழக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தொடக்கத்தில், அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவும், தேசியவாதக் கட்சியின் தலைவர் கலிதா ஜியாவும் இணைந்துதான் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். 1991ல் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக கலிதா ஜியா பதவியேற்றார். பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோவுக்குப் பிறகு இஸ்லாமிய நாட்டில் இரண்டாவதாய் ஒரு பெண் பிரதமரானது வங்கதேசத்தில் கலிதா ஜியாதான். அதன்பிறகே வங்கதேச அரசியல் `ஷேக் ஹசீனா Vs கலிதா ஜியா’ என மாறியது. 1996ல் நடந்த தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று ஆட்சியமைத்தார்.
அதன் பின்னர், 2001 முதல் 2006 வரை மீண்டும் கலிதா ஜியா வெற்றி பெற்று பிரதமராகப் பதவி வகித்தார். அதன்பிறகு அரசியல் வன்முறை, உள்நாட்டு கலவரம் உள்ளிட்டக் காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட, மீண்டும் ராணுவம் வங்கதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நிலையில், கலிதா ஜியா மீதும் அவரின் இரண்டு மகன்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2009 தேர்தலில் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற, பின்னர் வந்த அடுத்தடுத்த தேர்தல்களிலும் ஹசீனாவே பிரதமராக வெற்றிபெற்றார். 2018ல் தனது அரசியல் எதிரியும், பி.என்.பி எதிர்க்கட்சித் தலைவருமான கலிதா ஜியாவை ஊழல் வழக்கில் சிறையில் அடைத்தார் ஹசீனா. 17 ஆண்டுகள் கலியா ஜியாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் 2024 வங்கதேசத் தேர்தலில் மீண்டும் ஹசீனாவே வெற்றி பெற்றார்.
தொடக்கம் முதலே ஷேக் ஹசீனா இந்தியா ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வந்தார். அதேசமயம் கலிதா ஜியாவின் பி.என்.பி கட்சிக்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவளித்து வந்தது. இந்த நிலையில்தான், இட ஒதுக்கீட்டு விவகாரம் ஹசீனாவுக்கு எதிரானப் போராட்டமாக வெடிக்க, அதைப் பயன்படுத்திக்கொண்ட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு பி.என்.பி கட்சியுடன் சேர்ந்து மாணவர் போராட்டத்தை தூண்டிவிட்டது என்கிற கருத்தும் நிலவுகிறது.
சிறையில் இருந்து வெளிவந்து, நாட்டு மக்களுடன் பொதுவெளியில் உரையாற்றிய கலிதா ஜியா, “நான் இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன். இந்தப் போராட்டத்தை துணிச்சலுடன் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஊழல், தவறான கொள்கைகள், மோசமான அரசியலிலிருந்து நாம் மீண்டு வருவதற்கான புதிய வாய்ப்பை இந்தப் போராட்டத்தின் வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நாட்டின் எதிர்காலமான இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம். இது பேரழிவு, பழிவாங்கல், கோபம் கொள்வதற்கான தருணம் அல்ல. நம் வங்கதேச நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நமக்குத் தேவையானது அன்பும் அமைதியுமே. அந்த வழியில் இனி வங்கதேச ஜனநாயகத்தை நிலைநிறுத்துவோம்!” என பேசியிருக்கிறார்.இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வங்கதேசத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்பதை உலகமே உற்றுநோக்கி வருகிறது.
தொகுப்பு: மணிமகள்
The post ஹசீனா Vs கலிதா வங்கதேசத்தின் இரு துருவங்கள் appeared first on Dinakaran.