நன்றி குங்குமம் தோழி
பிடிச்ச விஷயங்களை செய்ய வயது என்றுமே தடை கிடையாது. 70 வயதைக் கடந்தும் பல பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் ஜிம்மிற்கு செல்கிறார்கள். ஒரு சிலர் ஊர் சுற்றிப் பார்க்க விரும்புகிறார்கள். ஒரு சிலரோ சொந்தமாக தொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்னையை சேர்ந்த கீதா கங்காதரனுக்கு எழுத்து மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் தன்னுடைய 72 வயதில் குழந்தைகளுக்கான ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வாழ்ந்த புனிதர்கள் (saints) குறித்து குழந்தைகளுக்கு புரியும் வகையில் அழகான சித்திரங்களுடன் ‘Saints Of Bharath’ என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார்.
‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே புத்தகங்கள் படிக்க பிடிக்கும். திருமணத்திற்குப் பிறகு என்னுடைய படிக்கும் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. குழந்தைகள், குடும்பம் என்று என்னுடைய அன்றாட வேலைகளுக்கு ேநரம் ஒதுக்கவே சரியாக இருந்தது. படிப்பில் ஆர்வம் செலுத்த முடியவில்லை என்றாலும், என்னுடைய அந்த ஆர்வத்தினை நான் என் குழந்தைகளுக்கு கட்டுரை எழுதுவதில் செலுத்தினேன். என் கணவர் ரோட்டரியில் கவர்னராக இருந்தார்.
அவரின் கிளப் மீட்டிங்கிற்கும் நான் எழுதி தருவேன். என் குழந்தைகளை தொடர்ந்து என் பேரப்பிள்ளைகளுக்கும் பள்ளிப் பாடங்களில் நான் உதவி செய்து வந்தேன். இப்படி நாட்கள் கடந்து வந்த நிலையில் சுமதி என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவங்க பெண்களுக்கான இதழ் ஒன்றை நடத்தி வந்தாங்க. அதில் நவராத்திரி கொண்டாட்டம் குறித்து ஒரு கட்டுரை எழுதி தரச் சொன்னாங்க. நானும் கொடுத்தேன்.அது அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அதனால் வாரம் ஒரு கட்டுரை எழுதி தரச் சொன்னாங்க.
அந்த இதழ் பொங்கல் சிறப்பிதழ் என்பதால், பெரும்பாலானவர்கள் பொங்கல் சார்ந்த கட்டுரைகளைதான் எழுதுவார்கள். பொங்கல் தினம் திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்படுவதால், நான் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தேன். அந்தக் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து ஒரு புனிதர் குறித்து கட்டுரை எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம் ஒருவர் என எந்தவித ஜாதி, மதம் வேறுபாடு இல்லாத பன்முகங்கள் கொண்ட புனிதர்களை எழுத திட்டமிட்டேன். தமிழ்நாட்டில் நமக்குத் தெரியும். ஆனால் இந்தியா முழுக்க உள்ளவர்களைப் பற்றி பலருக்கு தெரியாது. அதனால் இந்தியா முழுக்க உள்ளவர்களை எழுதினேன். அப்படி ஆரம்பிச்ச என்னுடைய எழுத்துப் பயணம் கிட்டத்தட்ட 46 கட்டுரைகள் வரை நீண்டது. ஆனால் இதை ஒரு புத்தகமாகக் கொண்டு வர முழு காரணம் என் கணவர்’’ என்றார்.
‘‘ஒவ்வொரு புனிதர்கள் பற்றி எழுதும் போது நான் நிறைய புத்தகங்கள், இணையத்தில் ஆய்வு செய்வேன். அதன் பிறகு தான் அவர்களை பற்றிய கட்டுரையை வெளியிடுவேன். இவர்களைப் பற்றி பலருக்கு குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் இதை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று என் கணவர் கூறினார். அப்போது என் மகள் அவரின் தோழி சந்தியா ஸ்ரீ தர் என்பவர் பிரசுரம் ஒன்றுக்கு ஆசிரியராக இருப்பதாக கூறினார்.
அவரிடம் கேட்ட போது அவரும் பப்ளிஷரிடம் கேட்க, நான் எழுதியதை அவருக்கு அனுப்ப சொன்னார். இவர்கள் 25 வயதிற்குள் இருப்பவர்களுக்கான புத்தகங்களை மட்டும்தான் பிரசுரம் செய்வதாகவும். அவர்களுக்கு புரியும்படி இந்தக் கட்டுரைகளை சுறுக்கி அமைத்து தரும்படி கூறினார். குழந்தைகளுக்கான புத்தகம் என்பதால் அழகான சித்திரங்களுடன் 31 புனிதர்களை தேர்வு செய்து, இந்தப் புத்தகத்தை கொடுத்திருக்கிறோம்.
தமிழகத்தில் திருவள்ளுவர், காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், ஆதிசங்கரர், கர்நாடகாவில் அக்கா மகாதேவி, சிந்துப் பகுதியில் லாலேஷ்வரி, காஷ்மீரில் ஜுலேலால், வடகிழக்கு மாகாணமான அசாமில் சங்கர் தேவ், புரேந்திர பிரசாத், சைத்தன்யா மகாபிரபு போன்றவர்கள் குறித்து அந்தப் புத்தகத்தில் பதிவு செய்தோம். இதன் மூலம் ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள புனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். இந்தப் புத்தகம் குழந்தைகளுக்கானது என்பதால், அதில் எது முக்கியமோ அதை மட்டும் ஹைலைட் செய்திருக்கேன். அவர்கள் யார், இந்த சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று குழந்தைகளுக்கு புரியும் வகையில் படைத்திருக்கேன். பல இடங்களில் வார்த்தைகளை மாற்றி அமைத்திருக்கேன். மேலும் பெரிய கட்டுரையாக கொடுத்தால் குழந்தைகள் படிக்க ஆர்வம் காட்டமாட்டார்கள். அதனால் 1000 வார்த்தை கட்டுரையை அழகான சிற்பம் போல் கிரிஸ்பாக வடிவமைத்திருக்கேன்.
இந்தப் புத்தகம் மூலம் 72 வயதில் அடுத்த சந்ததியினருக்கு நல்ல விஷயத்தை ெகாடுத்திருக்கேன் என்ற மனத் திருப்தி கிடைச்சிருக்கு. இதனைத் தொடர்ந்து திருக்குறளை குழந்தைகளுக்கு புரியும் வகையில் மொழிப்பெயர்ப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் அதை பலர் மொழிப்பெயர்ப்பு செய்திருப்பதால், வித்தியாசமான முறையில் கொடுக்க யோசனை செய்கிறோம். ஒவ்வொரு அத்தியாயமாக மொழிப் பெயர்க்காமல், அவர்களுக்குத் தேவையான அத்தியாயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் உள்ள அனைத்து குறள்களின் விளக்கங்களை ஒரே சாராம்சமாக கொடுக்க இருக்கிறோம். இதைத் தவிர நான் ஏற்கனவே எழுதி வந்த இதழில் பாரம்பரிய கட்டிடங்கள், காணாமல் போன பொருட்கள் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். நிறைய படிக்கணும், எழுதணும். அதுதான் இப்போது என்னுடைய முழு நேர கனவாக உள்ளது’’ என்றார் கீதா.
The post 72 வயதில் சித்திர புத்தகம்! appeared first on Dinakaran.