×
Saravana Stores

ஓவியமே என் வாழ்க்கை!

நன்றி குங்குமம் தோழி

‘‘நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கலை மேல் ஈடுபாடு இருக்கும். எனக்கு ஓவியம் வரைவதில் ஈடுபாடு ஏற்பட்ட காரணத்தால்தான் நான் இந்த துறையை தேர்வு செய்தேன்’’ என்கிறார் சௌமியா இயல். கலை மேல் இருந்த ஆர்வம் காரணமாக இவர் தன் பெயருடன் இயல் என்பதை இணைத்தார். தற்போது அதுவே அவருக்கான அடையாளமாக மாறி
விட்டது.

‘‘படிப்பிற்கும் கலைக்கும் பெரிய அளவில் சம்பந்தம் இல்லை. அது நம் ஆழ் மனதில் தோன்றும் சிந்தனையும் அழகியல் சார்ந்த உணர்வுகளாகும். கலை மேல் எனக்கு ஆர்வம் இருக்கு என்று நாம் அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பதும் சரியான செயல் இல்லை. கலை குறித்த சிந்தனை ஏற்படுத்த படிப்பு ஒரு சேனலாக அமைகிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான் இந்த துறைக்கு வரும் முன் பலர் ஃபைன் ஆர்ட்ஸ் படிக்கவில்லை. அதனால் நீ எப்படி உன்னை ஆர்ட்டிஸ்டுன்னு சொல்லிக்க முடியும்னு அவமானம் செய்துள்ளார்கள்.

சொந்த ஊர் விழுப்புரம். பள்ளிக் காலங்களில் படிச்சது எல்லாம் வேலூரில். அதன் பிறகு ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் முடிச்சேன். எனக்கு விஷுவல் மீடியாவில் வேலை பார்க்க விருப்பம் என்பதால், அனிமேஷனில் டிப்ளமோ படிச்சேன். அதனைத் தொடர்ந்து முதுகலையில் எலக்ட்ரானிக் மீடியா படித்தேன். தற்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் துணை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறேன்.

மேலும் பிரிலான்ஸ் முறையில் இலஸ்ட்ரேட்டராகவும் வேலை பார்க்கிறேன். இதில் ஸ்டோரி போர்ட், போஸ்டர்கள், லோகோ, புத்தக அட்டைகள், குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு படம் வரைவது என அனைத்தும் செய்து தருகிறேன். அதில் 1330 திருக்குறள்களை பெயின்டிங் மூலமாக வரைந்து சாதனை படைத்திருக்கேன். தற்போது சங்க இலக்கியங்களை எவ்வாறு ஓவியம் மூலம் சித்தரிக்கலாம் என்று அதனை படித்து வருகிறேன்’’ என்றவர் பெயின்டிங் மேல் ஏற்பட்ட ஆர்வம் குறித்து விவரித்தார்.

‘‘எனக்கு நினைவு தெரிந்த நாட்கள் முதல் நான் பெயின்டிங் செய்து வருகிறேன். அதை என்னுடைய தனிப்பட்ட திறமையாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் முதலில் நினைக்கவில்லை. ஆனால் வரைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. எங்கு சென்றாலும் பெயின்டிங் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் பிரஷ்களை கையில் கொண்டு செல்வேன். என்னுடைய பெரும்பாலான விடுமுறை நாட்கள் பெயின்டிங்கில் துவங்கி பெயின்டிங்கிலேயே முடியும். கையில் கிடைக்கும் புத்தகத்தில் ஏதாவது வரைந்து கொண்டு இருப்பேன். இப்போது கூட என் கையில் ஒரு ஸ்கேட்சி புத்தகம் இருக்கும்.

ஓவியம் தீட்டுவதுதான் என்னுடைய மனநிலையை இன்றுவரை மிகவும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவி வருகிறது. ஓவியம் வரைவது என் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டதுன்னு தான் சொல்லணும். என் மனதில் ஏற்படும் சந்தோஷம், துக்கம் அனைத்தையும் இதன் மூலமாகத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். தற்போது என்னுடைய வாழ்வாதாரமே ஓவியம் என்றாகிவிட்டது’’ என்றவர் அதனை முறையாக பயின்றுள்ளார். ‘‘நான் ஓவியம் குறித்த பயிற்சி எடுக்கும் போது, என்னுடைய பயிற்சியாளர் ஜெயராஜ் அவர்கள்தான் நான் அடுத்தகட்ட நகர்விற்கு செல்ல மிகவும் உதவியாக இருந்தார். ஓவியங்கள் வரையும் போது அதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் டெக்னிக்குகளை எல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

நான் முதன் முதலில் வரைந்த ஓவியம் இன்றும் என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. என்னுடைய கனவினை ஒரு பெண்ணின் முகத்தில் வெளிப்படுத்தினேன். எனக்கு மிகவும் பிடித்த முக அமைப்புகளை பார்த்தால் உடனே வரைந்திடுவேன். பட்டாம்பூச்சி, பறவைகள், விலங்குகள், மோனாலிசா கூட வரைந்திருக்கேன். நான் இதற்காக தனிப்பட்ட பயிற்சி எல்லாம் எடுக்கல. நானாகவே கற்றுக் கொண்டுதான் வரைய ஆரம்பித்தேன். அதன் பிறகு அதில் உள்ள நுணுக்கங்களை தெரிந்துகொள்ள மட்டும் பயிற்சி எடுத்தேன்.

நான் முழுமையாக பயிற்சி எடுக்காமல் வரைந்ததாலே பலர் என்னை கிண்டல் செய்திருக்கிறார்கள். நான் திருக்குறளை வரைந்த போதும் பலர் ஏளனம் செய்தார்கள். அது மனசுக்கு வருத்தத்தை அளித்த போதும் வைராக்கியமாக முடிக்க வேண்டும் என்று வரைந்தேன். அதை முழுமையா முடிக்க எனக்கு மூன்றரை வருஷமாச்சு. அதன் பிறகுதான் பலரும் என்னையும் ஒரு கலைஞராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். இதனைத் தொடர்ந்துதான் நம் தமிழ் சங்க இலக்கியங்களை வரைய திட்டமிட்டேன். இதற்கிடையில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் வாழ்க்கை முறைகள் குறித்தும் வரைய திட்டமிட்டிருக்கிறேன். பெண்கள் என்றாலே சமைக்கணும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளணும்னுதான் ஆண்கள் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை என் ஓவியம் மூலமாக மாற்ற நினைக்கிறேன்.

காரணம், பெண்கள் படிக்கிறாங்க, வேலைக்கு போறாங்க. ஆனால் சில பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் வேலைக்கு போகக்கூடாதுன்னு சொன்னால் அதை விட்டுவிட்டு வீட்டில் அடைந்துவிடுகிறார்கள். இதற்காக ஏன் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்கணும். நம்ம வீட்டில் அந்த மாற்றத்தை முதலில் கொண்டு வரணும். அப்போதுதான் சமுதாயத்திலும் மாற்றத்தை காண முடியும்.

நான் வரையும் ஒவ்வொரு படமும் ஒவ்வொருவரின் உணர்வினை பிணைக்கக்கூடியதாக இருக்கும். சிரிப்பு, அழுகை, கோபம், கவலை எதையும்
ஓவியம் மூலமாக கொண்டு வர முடியும். நான் வரைந்ததில் எனக்கு மிகவும் பிடித்த ஓவியம் இயற்கையுடன் மனிதர்களை இணைத்து வரைவதுதான். மேலும் என் மனநிலையை பிரதிபலிக்கும் பெண்களின் ஓவியங்களும் எனக்கு பிடித்தமானவை. திருக்குறள் காமத்துப்பால் குறித்து வரைந்த ஓவியங்கள்’’ என்றவர் பெண்களுக்கான அட்வைஸும் வழங்கினார்.

‘‘பெண்கள் படிக்கணும், வேலைக்கு போகணும். சொந்தக்காலில் நிற்கணும். எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் தங்களை சுருக்கிக் கொள்ளாதீர்கள். சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதீர்கள். மனசாட்சிக்கு நேர்மையாக இருங்க. நமக்கு பக்க பலமா இருப்பது நம்முடைய திறமை தான். காசு, பணம் அவசியம் என்றாலும், வாழ்க்கையில் நிம்மதியும் முக்கியம். அதற்கு முக்கியத்துவம் கொடுங்க.

நான் இதனை பிசினசாக மாற்றும் எண்ணம் இல்லை. என்னுடைய ஓவியத்தை சமூக வலைத்தளத்தில் போட்ட போது, அதைப்பார்த்து பலர் வரைந்து தரச்சொல்லி
கேட்கிறார்கள். அப்படித்தான் வரைந்து தருகிறேன். தற்போது பலர் கடிகாரம், டீ கப் ேபான்றவற்றிலும் வரைந்து தரச் சொல்லி கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை நான் வேறு என் ஓவியம் வேறு என்றில்லை. ஓவியம்தான் என் வாழ்க்கை’’ என்றார் சௌமியா இயல்.

தொகுப்பு: திலகவதி

The post ஓவியமே என் வாழ்க்கை! appeared first on Dinakaran.

Tags : Soumiya Yal ,
× RELATED பாலின பேதங்கள் ஒரு பார்வை