×
Saravana Stores

நடப்பாண்டு முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வு கட்டாயம்!

சென்னை: நடப்பாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு அமலுக்கு வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கும் நடப்பாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும்.

இந்தாண்டு முதல், ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்பட உள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., படிக்க, ‘நீட்’ தேர்வு கட்டாயம். அதேபோல, இளநிலை மருத்துவம் முடித்த பின், முதுநிலை மருத்துவம் படிக்க வேண்டும் எனில், அதற்கான நீட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து, இந்தியாவில் சேவையாற்ற வருவோர், அதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாட்டு மருத்துவ படிப்பை முடித்தோருக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய தகுதி தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பயிற்சி டாக்டராக முடியும். பின், நெக்ஸ்ட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளிலும் ஈடுபடவும் முடியும். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களும், இந்தியாவில் மருத்துவம் பார்க்க அளிக்க, நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதுவது கட்டாயம்.

கடந்த கல்வியாண்டில், இத்தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டில் அதை அமல்படுத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்து, அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

The post நடப்பாண்டு முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வு கட்டாயம்! appeared first on Dinakaran.

Tags : MPBS ,CHENNAI ,National Medical Commission ,MBBS ,Dinakaran ,
× RELATED எம்.பி.பி.எஸ் கட்ஆப்பில் வேறுபாடு: மாணவர்களிடையே ஆர்வம் குறைகிறதா?