நடிகர் மம்மூட்டி பேஸ்புக்கில் நேற்று முதன்முதலாக ஹேமா கமிட்டி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: மலையாள சினிமாவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாகவே நான் இப்போது முகநூலில் எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நடிகர்கள் சங்கமும், அதன் தலைமையும் பதில் கூறிய பின்னர்தான் உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய விளக்கத்தை கூற முடியும். அதனால் தான் நான் விளக்கம் அளிக்க சற்று காலதாமதம் ஆனது. இந்தத் துறையில் மோசமான செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அனைவரும் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நிகழவே கூடாத சில விவகாரங்கள் நடந்ததால்தான் அது குறித்து ஆராய்ந்து தீர்வு காண ஹேமா கமிட்டியை கேரள அரசு நியமித்தது.
இந்தக் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களையும், பிரச்னைகளையும் தீர்ப்பதற்காக கூறப்பட்டுள்ள வழிமுறைகளை நான் வரவேற்கிறேன். அதற்காக சினிமா துறையிலுள்ள அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தற்போது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து போலீஸ் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தின் முன் உள்ளது. யாருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஹேமா கமிட்டியில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு சட்ட சிக்கல் இருந்தால் புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். மலையாள சினிமாவில் பவர் குரூப் எதுவும் கிடையாது. அப்படி ஒரு நடைமுறையை சினிமாவில் கொண்டுவர முடியாது. சினிமா துறை நீடிக்க வேண்டும். இவ்வாறு மம்மூட்டி கூறியுள்ளார்.
The post ஹேமா கமிட்டி அறிக்கை; இத்தனை நாள் சும்மா இருந்தது ஏன்?: மவுனம் கலைத்தார் மம்மூட்டி appeared first on Dinakaran.