×

மேட்டூர் அருகே 5 இடங்களில் கூண்டு வைப்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க 4 ஆடுகளை கொடுத்த கிராம மக்கள்

*வனத்துறை உயரதிகாரிகள் முகாம்

*சிறப்பு வன காவலர்கள் குவிப்பு

மேட்டூர் : மேட்டூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆடுகளை கிராம மக்கள் கொடுத்துள்ளனர். வனத்துறை உயரதிகாரிகள் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். சிறப்பு வன காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று கிராமத்தில் நுழைந்து ஆடு, கோழிகளை வேட்டையாடி வருகிறது.

மேட்டூர் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்தும், கூண்டு வைத்தும் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் நுழையாமல், சிறுத்தை போக்கு காட்டி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட ஆடுகள், 10க்கும் மேற்பட்ட கோழிகளை சிறுத்தை கடித்து குதறி வேட்டையாடி உள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி, உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வன காவலர்கள் முகாமிட்டு சிறுத்தையை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். ட்ரேன் கேமரா மூலம் கண்காணித்த போது, பண்ணவாடி அருகே கருங்காடு என்ற பகுதியில் 2 சிறுத்தைகள் நடமாடுவது தெரிய வந்துள்ளது. சிறுத்தைகளை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் கூண்டுகளில் கட்டுவதற்கு கிராம மக்கள் தங்களின் ஆடுகளை கொடுத்துள்ளனர். ஒரு இடத்தில் உள்ள கூண்டில் நாய் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், தற்போது 2 சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றிரவு வெகு சீக்கிரமாகவே வீடுகளில் முடங்கினர். மேலும், எப்போது வேண்டுமானாலும் சிறுத்தை ஊருக்குள் வரலாம் என்ற பீதியில் விடிய விடிய தூங்காமல் விழித்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post மேட்டூர் அருகே 5 இடங்களில் கூண்டு வைப்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க 4 ஆடுகளை கொடுத்த கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Mettur ,Forest Department ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அனல்மின் நிலையத்தில்...