×
Saravana Stores

கர்நாடகத்துடன் ஓசூரை இணைக்காவிட்டால்… வாட்டாள் நாகராஜ் புது போராட்டம்

ஓசூர்: கர்நாடகாவுடன் ஓசூரை இணைக்காவிட்டால் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம் என மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த மறியல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். பெங்களூருவிலிருந்து சந்தாபுரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் வழித்தடத்தை அத்திப்பள்ளி வழியாக தமிழகத்தின் ஓசூர் வரையிலும் நீட்டிக்க கர்நாடகா அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழக அரசும் இத்திட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் அருகே கர்நாடகா-தமிழக எல்லையான அத்திப்பள்ளி – ஜூஜூவாடி இடையே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கன்னட சலுவளி, கன்னட ரக்சன வேதிகே ஆகிய அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். ஓசூரிலிருந்து கர்நாடகா சென்ற வாகனங்களை தடுத்து மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது வாட்டாள் நாகராஜ் அளித்த பேட்டியில், ‘ஓசூரை கர்நாடக மாநிலத்துடன் இணைக்க வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஊட்டி, ஓசூர் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ஓசூரை இணைத்த பிறகு தான் மெட்ரோ திட்டம் ஓசூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு அங்குலம் கூட நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு அனுமதியளிக்காவிட்டாலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டாலும் மக்களை திரட்டி நாங்களே கட்டுமான பணியில் ஈடுபடுவோம்’ என்றார்.

The post கர்நாடகத்துடன் ஓசூரை இணைக்காவிட்டால்… வாட்டாள் நாகராஜ் புது போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Karnataka ,Watal Nagaraj ,Vattal Nagaraj ,Attipally ,Bengaluru ,Chandapuram ,Dinakaran ,
× RELATED வணிகம், தொழில் நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்