- எழும்பூர்
- நாகர்கோயில்
- பெங்களூரு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதமர் மோடி
- சென்னை
- மோடி
- எழும்பூர்-
- மதுரை-பெங்களூரு
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- பாரத்
- மதுரை
சென்னை: எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு என தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு வந்தே பாரத் ரயில் சேவைக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளித்து வருகிறது. இந்த ரயில்கள் அதிகபட்ச வேகத்தை கொண்டுள்ளன. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை – நெல்லை, பெங்களூரு – சென்னை, சென்னை – விஜயவாடா, கோவை – பெங்களூரு, சென்னை – கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு கன்டோன்மென்ட் செல்லும் வந்தே பாரத் மற்றும் மீரட்டிலிருந்து லக்னோ செல்லும் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எழும்பூர்- நாகர்கோவில் செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எழும்பூர்- நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையேயான இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் மொத்தம் 16 பெட்டிகளை கொண்டவை. எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: ரயில்வே துறையில் மட்டுமே இன்று அதிநவீன ரயில் போக்குவரத்தை பார்க்க முடியும். முன்பு எல்லாம் புல்லட் ரயிலை சினிமா மற்றும் பேப்பரில் மட்டும்தான் பார்ப்போம். இன்று பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது அனைத்தும் பிரதமர் மோடியின் முயற்சியால்தான். ஏற்கனவே, சென்னை- மைசூர் வழியே ஒரு சேவை இருக்கிறது. மேலும், சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் இருக்கிறது.
சென்னையில் இருந்து திருப்பதி வழியாக விஜயவாடாவிற்கு வந்தே பாரத் இருக்கிறது. இப்படி சென்னையை மையமாக வைத்தே வந்தே பாரத் எண்ணிக்கை மிக வேகமாகவும் மாணவர்கள், மக்கள், வியாபாரிகள் என பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக உள்ளது. காலையில் சென்னையில் கிளம்பினால் மதியம் கோவை சென்றுவிடலாம். மதியம் கோவையில் இருந்து புறப்பட்டால் இரவு சென்னை வந்துவிடலாம். தமிழ்நாட்டில் இருந்து ரயில்வே தொடர்பாக எந்த திட்டம் போனாலும் அதற்கு உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார். கடந்த பட்ஜெட்டில் கூட ரூ.6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்சியில் மும்மடங்கு தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் ரயில்வேயின் செயல்பாடாக இருக்கிறது. இவ்வாறு பேசினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பிரதமர் மோடி தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று பறைசாற்றுகிறார். மலேசியா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமிழ்மொழியே இந்தியாவிற்கு பெருமை. 2047ம் ஆண்டு தமிழ்நாட்டை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவதே இலக்கு. பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post எழும்பூர்-நாகர்கோவில்; மதுரை-பெங்களூரு தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.