- அமைச்சர்
- பெற்றோரைக் கொண்டாடுவோம்'
- நெல்லை
- அன்பில் மஹேஸ்போய்யாமோஷி
- பெற்றோர் மாநாட்டைக் கொண்டாடுவோம்
- தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை
- மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- எங்கள் பெற்றோர்கள்
- புருமிதம்
நெல்லை: புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் என அடுத்த தலைமுறையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்று நெல்லையில் நடந்த பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல மாநாடு, பாளை. ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் மாநாட்டை துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது: இந்த மண்டலத்தில் பள்ளிகளுக்கு ரூ.642 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன். சுயநலம் இல்லாத எண்ணம் கொண்டவர்கள் ஆசிரியர்கள். அவர்களை நாம் கொண்டாட வேண்டும். குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. கல்லூரி படிப்புக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்வதற்கான திறனை வளர்ப்பதற்காக நான் முதல்வன் திட்டம் என அடுத்த தலைமுறைக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.
அடுத்த தேர்தலை பற்றி நாங்கள் சிந்திக்காமல், அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பிள்ளைகளின் திறமைகளை வளர்க்க பல்வேறு வகையான போட்டிகளை நடத்துகிறோம். இதில் முதல் ஆண்டில் 24 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 2ம் ஆண்டில் 40 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களது திறமைகளை கண்டுபிடித்து வெளிக் கொணர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களை பாராட்டி அமைச்சர் கவுரவித்தார். 4 மாவட்டம் சார்பில் மொத்தம் ரூ.642 கோடியில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
* ஆசிரியர்களும், பெற்றோரும் இணைந்து உழைத்தால் நல்ல சமூகம் உருவாகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாநாட்டை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலியில் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் திட்டங்களை பட்டி, தொட்டி எல்லாம் கொண்டு சேர்ப்பது தான் அரசின் எண்ணம். அப்போதுதான் அந்தத் திட்டங்கள் முழுமை அடையும். செயற்கை நுண்ணறிவு திட்டத்தை கொண்டு வருவதற்காக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். பள்ளிக் கல்வித்துறைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 57 திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்த திட்டங்களின் நோக்கம், முழு பயன்பாடு ஆகியவற்றை பெற்றோர் தெரிந்து கொள்ளத் தான் இந்த மாநாடு. ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து உழைத்தால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
* தமிழ்நாட்டுடன் கல்வியை ஒப்பிட எந்த மாநிலமும் இல்லை: சபாநாயகர் அப்பாவு
மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘‘புதிய கல்விக்கொள்கைப்படி இந்தியாவில் 2035க்குள், 50 சதவீதம் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் 51 சதவீதம் பேர் பட்டப்டிப்பு பயில்கின்றனர். இந்தியாவில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 37 கல்லூரிகள் உள்ளன. முதல் 100 பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவில் கல்வியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டுடன் கல்வியை ஒப்பிட இந்தியாவில் எந்த மாநிலமும் இல்லை’’ என்றார்.
The post புதுமைப்பெண்… தமிழ்ப்புதல்வன்…. நான் முதல்வன்… என அடுத்த தலைமுறையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்: ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ மாநாட்டில் அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.