சென்னை: சென்னை மற்றும் புறநகரில் திடீரென சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 17 விமானங்கள், புறப்பட வேண்டிய 15 விமானங்கள் 2 மணிநேரம் தாமதமாகின. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரும் அளவு பாதிக்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க விசாகப்பட்டினம், மதுரை, மும்பை, டெல்லி, ஐதராபாத், கோவை, லக்னோ, டாக்கா உள்ளிட்ட 17 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்தன. அதோடு அந்த விமானங்களில் எரிபொருள் குறைவாக இருந்த விமானங்கள், தொடர்ந்து வானில் வட்டமடித்து பறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் விசாகப்பட்டினம், கோவை, டெல்லி ஆகிய மூன்று விமானங்கள் பெங்களூருக்கும், மதுரை விமானம் திருச்சிக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த 4 விமானங்கள் தவிர, மற்ற விமானங்கள் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்தன.
அதன்பிறகு சூறைக்காற்று, மழை, இடி, மின்னல் சற்று ஓய்ந்த பின்பு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் டெல்லி, கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சிங்கப்பூர், குவைத், துபாய் உள்ளிட்ட 15 விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக, சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை என 32 விமானங்கள் தாமதமாகி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
The post சூறைக்காற்றுடன் மழையால் சென்னையில் 32 விமானங்கள் தாமதம்: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.