- ஆந்திர போலீஸ்
- YSR காங்கிரஸ்
- முதல்வர்
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- மும்பை
- குஜராத்
- காதம்பரி
- மும்பை போலீஸ்
- காதம்பரி
திருமலை: மும்பையை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர். இவரது குடும்பத்தில் உள்ள ஒருவர், திருமண ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த டிசம்பர் மாதம் குஜராத் நடிகை காதம்பரி என்பவர் மும்பை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனிடையே நடிகை காதம்பரி ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக விஜயவாடாவை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வித்யாசாகர் என்ற தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் நடிகையை கடந்த ஜனவரி மாதம் விஜயவாடா போலீசார் மும்பை சென்று கைது செய்தனர். அதன்பின்னர் பலாத்கார புகாரை நடிகை திடீரென வாபஸ் பெற்றார். அதன்பின்னர் பணம் மோசடி வழக்கில் நடிகைக்கு கடந்த மார்ச் மாதம் ஜாமீன் கிடைத்தது. மும்பைக்கு சென்ற ஆந்திர போலீசார் நடிகையின் மொத்த குடும்பத்தையும் விஜயவாடாவுக்கு அழைத்து வந்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் விஜயவாடா போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு இதனை விசாரித்து பாதிக்கப்பட்டவருக்கு உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்று டிஜிபி துவாரகா திருமலை ராவுக்கு தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட நடிகையிடம் ஆன்லைனில் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையர் ஸ்ரவந்தியை ஆந்திர மாநில அரசு நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை காதம்பரி ஜேத்வானி மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆந்திர போலீசார் கடத்தி வந்து கிட்டத்தட்ட 40 நாட்கள் காவலில் வைத்து சித்ரவதை செய்தனர். மேலும் வெள்ளை பேப்பரில் கையெழுத்து பெற்று போலீசார் ஜாமீன் வழங்கி மும்பையில் ஜிந்தால் குடும்பத்தினர் மீதான புகாரை வாபஸ் வாங்க வைத்தனர். இதற்கு அப்போதைய விஜயவாடா போலீஸ் கமிஷனர் கிராந்தி ராணா டாடா, டிசிபி விஷால் குன்னி மற்றும் அரசின் மற்றொரு தலைமை ஆலோசகர் ஆகியோர் இதற்கு முக்கிய காரணம்” இவ்வாறு அவர் கூறினார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால் இதில் பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொழிலதிபர் புகாரில் குஜராத் நடிகையை கடத்தி ஆந்திர போலீஸ் 40 நாட்கள் சித்ரவதை: விசாரணை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு appeared first on Dinakaran.