×
Saravana Stores

விருச்சிக ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன்

மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய்தான் அதிபதியாக வருகிறார். ஆனாலும் மேஷச் செவ்வாய்க்கும், விருச்சிக செவ்வாய்க்கும் வித்தியாசம் உண்டு. பூமியை ஆளும் செவ்வாய் தன் வீரியத்தையும் வேகத்தையும் குறைத்துக் கொண்டு சாத்வீக, சௌமியமான செவ்வாயாக விருச்சிகத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறார். மேஷச் செவ்வாய் வீடு கட்டும் பூமிக்கு அதிபதி என்றால், விருச்சிகச் செவ்வாய் விளைநிலங்களுக்கு அரசன் ஆவார். அதனால்தான் இந்த ராசியில் பிறந்த பலருக்கு பச்சைப் பசேலென பரந்திருக்கும் விளைநிலங்களை காண்பதும், வாங்குவதும் பிடித்தமானதாக இருக்கும். ஒரு கிரவுண்ட் இடத்தை வாங்கி, அதில் கால் கிரவுண்டில் வீட்டைக் கட்டி மீதியை அப்படியே தோட்டமாக மாற்றுவீர்கள்.

வெளிநாட்டில் கோடி கோடியாக சம்பாதித்தாலும் சொந்த ஊரில்தான் வசிக்க விரும்புவீர்கள். இப்படி ரசனைகளும் ஆசைகளும் இருந்தாலும் உங்களால் உடனடியாக வீடு வாங்க முடிவதில்லை. ஏனெனில், உங்கள் வீட்டு யோகத்தை நிர்ணயிக்கும் நான்காம் வீடு என்பது கும்பச் சனியாக வருகிறது. உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு சனியானவர் எதிர்மறை கதிர்வீச்சைக் கொண்டவர். அதனால் வீடு என்றாலே ஒரு மனப்போராட்டம் ஆரம்பித்து விடும். இரண்டு, மூன்று முறை முயற்சித்து முடியாமல் போகும் நிலைவரும். ‘’என்னமோ… அதுக்கப்புறம் அந்த இடத்து மேல ஆர்வமே போயிடுச்சு’’ என்று தவிர்த்து விடுவீர்கள். பொதுவாக நீங்கள் வாங்கும்போது சகுனங்கள் சரியில்லாமல் இருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். அப்படி நிமித்தங்கள் சரியில்லையே என்று ஏமாந்து விடாதீர்கள்.

எதிலும் பின்வாங்காதீர்கள். உங்களில் பலர் நல்ல நாளெல்லாம் பார்த்து குறித்து வைத்திருப்பீர்கள். ஆனால், அன்றைக்கு எதுவும் சாதகமாக இருக்காது. செவ்வாய் உங்கள் ராசிக்கு அதிபதியாக வருவதால், ‘செவ்வாயோ வெறும்வாயோ’ என்கிற பழமொழி உங்களுக்குப் பொருந்தாது. அதாவது, ‘செவ்வாய் எதுவும் செய்ய மாட்டார்’ என்பது உங்கள் விஷயத்தில் பொருந்தாது. அதுபோல சனிக்கிழமையன்று முன்பணம் கொடுக்காதீர்கள். கட்டிடகாரகன் எனப்படும் சுக்கிரன் உங்களுக்கு நட்பு கிரகமாக வருகிறார். மேலும், அவரே வாழ்க்கைத்துணைக்குரிய வீட்டை நிர்ணயிப்பவராகவும் வருகிறார். அதனால், வாழ்க்கைத்துணை வந்தபிறகு அவரின் தூண்டுதலால்தான் வீடு வாங்குவீர்கள். ‘‘நாலஞ்சு பில்டருங்க ஃபிரெண்டுன்னு சொல்றீங்க.

ஆனா நமக்குன்னா மனசு வைக்க மாட்டேன்றீங்களே’’ என்று வாழ்க்கைத்துணை அடிக்கடி அலுத்துக் சொள்வார். எப்போதுமே நீங்கள் லோன் விஷயங்களை சரியாக ஏற்பாடு செய்தபிறகு வீடு கட்டத் தொடங்க வேண்டும். இல்லையெனில் பெரும் அவஸ்தைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த ராசியில் விசாகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமும், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களும் இடம் பெறுகின்றன. முதலில் விசாகம் நான்காம் பாதத்தைப் பற்றிப் பார்ப்போம். விருச்சிக ராசியிலேயே அதிர்ஷ்டசாலி நீங்கள்தான். சாதாரணமாக சேமித்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், திடீரென்று வீடு வாங்க வேண்டுமென்று ஆசைப்பட்டு முடித்து விடுவீர்கள். ‘‘இப்பவும் ஒரு அசட்டு தைரியத்துலதான் வீடு வாங்கப்போறேன்’’ என்பீர்கள். அதே சமயம் தினசரி வாழ்க்கையில் பொருளாதார நிலை பாதிக்கக் கூடாது என்று நினைப்பீர்கள்.

‘‘வீட்டுக்காகத்தான் பார்த்துக்கிட்டிருக்கேன்’’ என்றெல்லாம் நீண்ட நாள் சொல்லிக் கொண்டிருப்பது பிடிக்காது. ‘‘நாளைக்குக் காலையில இடம் பார்க்கப் போறோம்’’ என்று திடீரென்று சொல்வீர்கள். பார்த்ததும் முடித்து விடுவீர்கள். ஒரு வீடு மட்டும் என்று நில்லாமல் இரண்டு, மூன்று என்று முதல் சொத்து வாங்கும்போதே உள்ளுக்குள் திட்டம் ஓடிக் கொண்டிருக்கும். ‘‘ஏரியா கொஞ்சம் சுமார்தான். அதனால் இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, நாம இப்ப இருக்கற வாடகை வீட்லயே இருக்கலாம்’’ என்று முடிவெடுப்பீர்கள். நான்கைந்து வருஷங்கள் கழித்து அந்த வீட்டை விற்றுவிட்டு, பிடித்த இடத்தில் வேறொரு வீட்டை வாங்குவீர்கள். 39 வயதுக்குப் பிறகுதான் எல்லாமும் அமையும். 51, 54, 55, 60, 64 வயதுகளில் ஒன்றுக்கு இரண்டாக வாங்குவீர்கள். 25 முதல் 40 வரை குரு தசை நடைபெறும். உங்களின் சக்திக்கு மீறி வாழ்வின் உச்சத்தை தொடுவீர்கள்.

மன்னர்கள், சந்நியாசிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரில் தெருக்கள் இருந்தால் உங்களுக்கு நல்லது. மூன்று, நான்கு தெருக்களின் சந்திப்பில் வீடு அமைந்தாலும் நல்லது. பூர்வீகச் சொத்து உங்களுக்குத் தங்காது. வக்கீல், ஓய்வுபெற்ற நீதிபதி போன்றோர் உங்களின் எதிர் வீடு, பக்கத்து வீடுகளில் இருப்பார்கள். எப்போதுமே வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் பெயரில் இடத்தை வாங்குங்கள். அதற்குப் பிறகு வேண்டுமானால் உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நேரடியாக உங்கள் பெயரில் வாங்கினால் தங்காது. வீட்டின் தலைவாசல் தெற்கு, தென் கிழக்கு போன்ற திசை நோக்கி இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கும் ஊரின் தெற்குப் பகுதியில் வீடு அமைந்தால் அதிர்ஷ்டத்தைத் தரும். செம்மண், மணல் பூமியாக இருப்பின் நல்லது.

உங்களுக்கு எல்லா தளங்களுமே ஏற்றதாகும். பூசம், அனுஷம், மூலம், அவிட்டம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திர நாட்களில் பத்திரப் பதிவையும், கிரகப் பிரவேசத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அனுஷம் நட்சத்திரம். உங்களின் ராசியாதிபதியாக செவ்வாய் வருகிறார். ஆனால், அனுஷம் சனியின் நட்சத்திரம். வழக்கம்போல தாமதப்படுத்தித்தான் வீட்டை அளிப்பார். ‘‘வீடு, வாகனம், வசதி வாய்ப்பெல்லாம் பளிச்சுன்னு அமைய மாட்டேங்குது’’ என்று அடிமனதில் ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். கல்யாண வயதில் வீட்டு ஆசை அதிகமிருக்கும். ஒன்றிரண்டு முறைகள் முயற்சித்து விட்டு, ‘நாம அதிகமா ஆசைப்படறோமோ’ என்று விட்டுவிடுவீர்கள். ஆனால், 33, 37, 41, 42 வயதுகளில் திடீர் வாய்ப்புகள் வரும். நீங்கள் எங்கு வீடு வாங்கினாலும் குடிசைப் பகுதிகள் நிச்சயம் இருக்கும். பரவாயில்லையென்று வாங்கிப் போடுங்கள்.

மருத்துவமனை, காவல் நிலையம் போன்றவைகளுக்கு பக்கத்தில் வீடு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி அமைந்தால் உடல்நலக் குறைவு, சண்டை, சச்சரவுகள் ஏற்படக்கூடும். வழிபாட்டு மன்றம், பஜனை கூடம், மடம், வங்கி, பிள்ளையார் கோயில் போன்றவற்றிற்கு அருகே இருந்தால் வீட்டில் வளம் கொழிக்கும். வட கிழக்கு, தெற்கு பக்கமாக வீட்டின் தலைவாசல் இருந்தால் நல்லது. இதே திசையில் ஊரில் இடமாகவோ வீடாகவோ கிடைத்தால் வாங்கத் தயங்காதீர்கள். அதே சமயம் பேருந்து நிலையம், பஸ் ஸ்டாப், ரயில் நிலையம் போன்றவற்றிற்கு அருகில் உங்களுக்கு வீடு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமுண்டு. அனுஷம் என்றாலே எப்போதும் மெல்லிய துறவு மனப்பான்மையும், அமைதியையும் விரும்புவீர்கள். அதனால் இம்மாதிரியான இடங்களைத் தவிர்ப்பீர்கள். அபார்ட்மென்ட்டில் தரைத் தளத்தில் வீடு அமைந்தால் தவிர்த்து விடுங்கள்.

பூர்வீகச் சொத்துகளை விற்று, வேறு இடத்தில் சொத்து வாங்குவீர்கள். கட்டிடகாரகன் சுக்கிரன் உங்களுக்கு வங்கிக் கடன்களுக்கு உதவுவார். வீட்டை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டு விட்டு, விற்பவர் அதன்பிறகு மாற்றிப் பேசாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளைநிலமா, வீடு கட்ட அனுமதியுண்டா, தாய்ப் பத்திரம் சரியாக இருக்கிறதா என்பதையெல்லாம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், உத்திராடம், திருவோணம், ரேவதி போன்ற நட்சத்திர நாட்களில் புதுமனை புகுவிழாவையும், பத்திரப் பதிவையும் வைத்துக் கொள்ளுங்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் வித்தியாசமானவர்கள். ஒரு ஏரியாவைச் சொல்லி, ‘‘எனக்கு அந்தத் தெருவுல ஒரு ப்ளாட் இருக்கு’’ என்று பெருமைப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் வாங்கியுள்ள ஏரியாவில் உங்களைத் தவிர வேறு யாரும் வாங்கியிருக்க மாட்டார்கள். அதனால் மற்றவரை வாங்கத் தூண்டுவீர்கள்.

‘‘நான் அஞ்சு வருஷம் முன்னாடி வாங்கும்போது எப்படி இருந்தது தெரியுமா. இப்போ போய் பாருங்க. என்ன ரேட் போகுதுன்னு கேட்டுப் பாருங்க’’ என்பீர்கள். பொதுவாகவே அங்கீகாரமில்லாத விஷயங்களை உயர்த்துவதில் நீங்கள் சமர்த்தர். வீட்டை கண்ணாடி போல துடைத்துத் துடைத்து வைத்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாய் உங்கள் நட்சத்திர நாயகனான புதனுக்கு பகையாக இருந்தாலும், கட்டிடகாரகனான சுக்கிரனுக்கு நட்பாக இருப்பதால் எளிதில் வங்கிக் கடன் கிடைக்கும். வீடு என்றால் முதலில் நிலத்தடி நீர் எப்படியிருக்கும் என்றுதான் நினைப்பீர்கள். மழை வந்தால் என்ன ஆகும் என்றுதான் கவலைப்படுவீர்கள்.

வீட்டை வாங்குவதற்கு முன்பு எல்லா டாக்குமென்ட்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். தனி வீடு கட்டத்தான் பெரும்பாலும் விரும்புவீர்கள். கீழே கார் பார்க்கிங் வைத்து, தூணை ஏற்றி முதல் மாடியாக கட்டுவீர்கள். முதலில் உங்களுக்கென்று தீர்மானமாக ஒரு வீட்டை வாங்கி வைத்து விடுங்கள். ஏனெனில், இதை வாங்கி அதை விற்பது என்று மாறி மாறி ஏதாவது செய்து கொண்டிருப்பீர்கள். எதிலும் திருப்தியடையாமல் இருப்பீர்கள். 27லிருந்து 35 வயதுக்குள் வீடு அமையும். வீட்டிற்குள் எது சரியில்லையென்றாலும் உடனே அதை மாற்றிவிடுவீர்கள்.பள்ளி, விளையாட்டு திடல், டியூஷன் சென்டர், பெட் கிளினிக், தியான மையம், தபால் நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் வீடு அமைவது நல்லது. மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து அழகு பார்ப்பீர்கள்.

அதேபோல வீட்டிற்கு அருகே இடம் கிடைத்தால் பேட்மிட்டன், டென்னிஸ் மைதானம் அமைப்பீர்கள். வடக்கு, வட மேற்கு, தென்கிழக்கு திசைகளை நோக்கி தலைவாசலை அமையுங்கள். நீங்கள் வசிக்கும் ஊரில் அந்த திசையில் வரும் இடங்கள் வந்தால் வாங்கிப் போட முயற்சியுங்கள். அஸ்வினி, மிருகசீரிஷம், மகம், அனுஷம், மூலம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் புதுமனை புகுவதையும், பத்திரப் பதிவையும் வைத்துக் கொள்ளுங்கள். விருச்சிக ராசிக்காரர்களின் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவர் கும்பச் சனி ஆவார். மகரச் சனியை விட கும்பச்சனி கொஞ்சம் மெதுவாக இயங்கும் ராசியாகும்.

மேலும், உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் ஆகும். செவ்வாய்க்கு அதிபதி முருகன் ஆவார். பெரும்பாலும் சிறு குன்றுகள், மலைகள் எல்லாமுமே சனியின் ஆதிக்கத்தில் வரும். அப்படிப்பட்ட சனியின் ஆதிக்கத்தில் செவ்வாயின் அதிபதியான முருகன் கோயிலை தரிசிக்கும்போது வீட்டு யோகம் உங்களுக்கு எளிதாக அமையும். அப்படிப்பட்ட ஓர் அற்புதத் தலமே கழுகுமலை. வீரம் நிறைந்த விருச்சிக ராசிக்கு, முருகனை வணங்கினால் ஏற்றம் மிகுந்த வாழ்க்கை அமையும். மேலும் இத்தலத்தில் போர்க்கோலம்போல ஆயுதங்களோடு முருகன் காட்சியளிக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

 

The post விருச்சிக ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன் appeared first on Dinakaran.

Tags : Scorpios ,Aries ,Scorpio ,Mars ,Bhumikaraka ,earth ,
× RELATED விருச்சிகம்