×

செவ்வாய்க் கிரகத்தை அங்காரகன் என்று சொல்வது ஏன்?

செவ்வாய்க் கிரகத்தை அங்காரகன் என்று சொல்வது ஏன்?
– கே.விஸ்வநாத், பெங்களூரு.

தணல் போன்ற நெருப்பினை உடைய கரித்துண்டினை அங்காரகன் என்று சொல்வார்கள். நெருப்பு கிரஹம் என்று செவ்வாயைக் குறிப்பிடுவதுண்டு. செந்நிறத்தோன் என்றும் சொல்வார்கள். செவ்வாய் கிரகம் எப்படி உருவானது என்பதற்கு ஒரு புராணக்கதையும் உண்டு. பரமேஸ்வரனுக்கும் அந்தகாசுரனுக்கும் இடையே யுத்தம் நடந்த காலத்தே சிவபெருமானின் வியர்வைத்துளி பூமியில் பட்டு பூமி இரண்டாகப் பிளந்தது என்றும், அதில் ஒரு பாகமானது அந்தகாசுரனின் ரத்தத்துளிகள் மொத்தத்தையும் விழுங்கிக் கொண்டது, ரத்தத்துளிகள் நிறைந்ததால் அது செந்நிறமாக காட்சியளிக்கிறது என்றும் அதனால் அந்த கிரகம் அங்காரகன் என்று பெயர் பெற்றது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பூமியில் இருந்து பிரிந்து சென்றதுதான் செவ்வாய் என்ற கதை புராணத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அதனை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்களின் விஞ்ஞான அறிவை என்னவென்று சொல்வது?

?எந்தப் பழக்கம் அடியோடு வெற்றியைப் பாதிக்கும்?
– பரிமளா, திருச்சி.

தள்ளிப் போடும் பழக்கம் தான் ஒருவனுடைய வெற்றியை பாதிக்கும். ‘‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’’ ‘‘நாளைப் பார்த்துக்கொள்ளலாம்’’ ‘‘அடுத்த மாதம்தானே, இன்னும் நாளிருக்கிறது’’ என்று வேலையைத் தள்ளிப் போடுபவர்கள், அந்த வேலையை எப்பொழுதும் செய்வதில்லை. இது ஆன்மிகத்துக்கும் பொருந்தும்.

?தொழில்புரியும் இடங்களில் சிவலிங்கத்தின் கோமுகம் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும்? லிங்கத்திற்கு வலது புறமா அல்லது இடது புறமா?
– பொன்.மாயாண்டி, ராயபுரம்.

தொழில்புரியும் இடம்தான் என்றில்லை, எங்குமே சிவலிங்கத்தின் கோமுகம் என்பது வடக்குத்திசையை நோக்கி இருக்க வேண்டும். வலதுபுறம் இடதுபுறம் என்று கணக்கில் கொள்ளக்கூடாது. திசையைத்தான் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான ஆலயங்களில் சிவபெருமானின் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். அந்த சந்நதிகளில் லிங்கத்திருமேனிக்கு இடதுபுறமாக அதாவது வடக்குத் திசையை நோக்கியவாறு கோமுகம் என்பது அமைக்கப்பட்டிருக்கும். ஒருசில ஸ்தலங்களில் மேற்கு நோக்கிய சந்நதி அமைந்திருக்கும். மேற்கு நோக்கிய சந்நதிகளில் லிங்கத் திருமேனிக்கு வலதுபுறத்தில் அதாவது அங்கும் வடக்குத் திசை நோக்கியே கோமுகம் என்பது அமைக்கப்பட்டிருக்கும். ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அபிஷேக திரவியமானது வடக்குப்புறமாக செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். மிகவும் அரிதாக கோமுகத்தை தெற்கு நோக்கி வைத்திருக்கும் தலங்களும் உண்டு. இதுபோன்ற தலங்கள் எம பயத்தைப் போக்கும் என்றும் சொல்வார்கள். இது அந்தந்த ஆலயங்களின் ஸ்தல புராணத்தைப் பொறுத்தது. ஆலயங்கள் தவிர்த்து பொதுவாக சாமானிய மனிதர்கள் ஆகிய நாம் வீடுகளிலும் சரி, அல்லது நாம் தொழில் செய்யும் இடங்களிலும் சரி, சிவவழிபாடு செய்ய நினைக்கும்போது லிங்கத்தின் கோமுகமானது வடக்குத் திசை நோக்கி இருக்குமாறு வைத்து வழிபடுவதே சாலச் சிறந்தது.

?தந்தைக்கு திதி கொடுக்க குளம் உள்ள கோயிலில்தான் தர வேண்டு சில கோயில்களில் குளமே இல்லை. அவ்வாறு இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
– வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

சிராத்தம் அல்லது திதி என்பதை நாம் குடியிருக்கும் வீட்டில்தான் செய்ய வேண்டும். புனித தலங்களுக்குச் செல்லும்போதும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளும்போதும் அங்குள்ள நீர் நிலைகளில் சிராத்தம் செய்வது என்பது விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது. கோயில் என்பது இறைவன் குடியிருக்கும் இடம். அங்கே சிராத்தம் செய்வது என்பது விதிகளில் இல்லை. அதே நேரத்தில் அந்த கோயில்களில் உள்ள திருக்குளங்களின் படித்துறைகளில் சிராத்தம் செய்வது ஏற்கத்தக்கதே. இவை அனைத்தும் பித்ருக்களுக்கான விசேஷ நாட்களில் செய்ய உகந்தவையே தவிர, பிரதி வருடந்தோறும் வருகின்ற பெற்றோரின் சிராத்தத்தை அதாவது திவசத்தினை செய்வதற்காக அல்ல. வருடத்திற்கு ஒருமுறையே வருகின்ற சிராத்தத்தினை நாம் குடியிருக்கும் வீட்டில்தான் செய்ய வேண்டும்.

?மறைந்த மகான்களின் ஜீவசமாதியின் மேல் சிவலிங்கம் அமைத்து வழிபடுவதன் காரணம் என்ன?
– ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

மகான்களின் சமாதியின் மேல் சிவலிங்கம்தான் அமைந்திருக்கும் என்பதில்லை. இது அந்த மகான்கள் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றியவர்களோ அதன் அடிப்படையில் அமைவதாகும். அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றிய மகான்களின் சமாதியின் மேல் மட்டும்தான் சிவலிங்கம் என்பது அமைந்திருக்கும். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றி வந்த பெரியோர்களின் சமாதியின் மேல் வைணவச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதுபோல துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றி மத்வ ஆச்சாரியார்களின் சமாதி பிருந்தாவனம் என்ற பெயரில் துளசி மாடம் போல் அமைந்திருக்கும். இதுபோன்ற சமயச் சின்னங்கள் அமைந்திருப்பதன் காரணம் யாதெனில் இறைவனின் தூதுவர்களாக இந்த உலகில் அவதரித்த அந்த மகான்கள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார்கள் என்பதை உணர்த்தவே ஆகும். அவர்கள் வேறு, இறைவன் வேறு என்று பிரித்துக் காணவேண்டிய அவசியம் இல்லை. ஜீவசமாதியாகிவிட்ட மகான்களின் சமாதியிலும் இறைசாந்நித்யம் என்பது நிறைந்திருக்கும் என்பதை உணர்த்தவே இவ்வாறு சமயச் சின்னங்கள் சமாதிகளின் மேல் அமைக்கப்படுகிறது.

The post செவ்வாய்க் கிரகத்தை அங்காரகன் என்று சொல்வது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Mars ,Ankaragan ,K. Viswanath ,Bangalore ,Fire ,Angkor ,Dinakaran ,
× RELATED ருசக யோகம்