×

இந்த வார விசேஷங்கள்

கந்த சஷ்டி ஆரம்பம்2.11.2024 சனி

சஷ்டி என்றால் ஆறு ஆகும். முருகன் என்றாலே ஆறுதான். முகங்கள் ஆறு. நாமத்தின் எழுத்துக்கள் ஆறு. தோன்றிய பொறிகள் ஆறு. வளர்த்த பெண்கள் ஆறு. எனவே இந்த விரதமும் ஆறு நாட்கள். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் விரத நாட்களாக கருத வேண்டும். இந்த ஆண்டு நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 08 ம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதியும், முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம் நவம்பர் 08ம் தேதியும் நடைபெற உள்ளது. விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆறு நாட்களும் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.

இந்த விரதம் தொடங்கும் நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். காலை மாலை என இரண்டு வேளையும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைக்க வேண்டும். முழு பட்டினி முடியாதவர்கள் பால், தயிர், மோர் போன்ற பால் பொருட்கள் அனைத்தும் சத்து நிறைந்தவை என்பதால் விரதம் இருக்கும் போது சாப்பிடலாம். பாலில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. கந்த சஷ்டி விரதம் இருந்தால் திருமண தடைகள் நீங்கும் குழந்தை பாக்கிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள் தொல்லை ஒழியவும், நோய், கடன் பிரச்னை தீரவும் சஷ்டி விரதம் இருந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

பூசலார் நாயனார் 3.11.2024 ஞாயிறு

ஒவ்வொருவர் உள்ளத்துள்ளும் இறைவன் வந்து அமர நினைக்கின்றான். அதனால் உள்ளமே பெருங்கோயில். உள்ளமே பெருங்கோயிலாக நினைத் தவர்கள் உண்டா என்று சொன்னால் உண்டு. அவர்தான் பூசலார் நாயனார். பூசலார் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்திலே தோன்றியவர். சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தவர். சிவபெருமானுக்கு திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பியவர்.

தம்மிடத்துப் பொருள் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடியும் பெற இயலாது துடித்தவர் இந்நிலையில் மனத்திலே சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைக்க எண்ணினார். மனத்தின்கண் மாசின்றி, திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் தச்சர் முதலிய பணியாளர் களையும் தேடிக் கொண்டார். நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தொடங்கி இரவும் துயிலாமல் கட்டி முடித்தார். திருக்கோயி லுள்ளே சிவபெருமானை எழுந் தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார்.

இதே காலத்தில், காடவர்கோன் எனும் அரசன் காஞ்சி நகரத்திலே இறை வனுக்குத் திருக்கற்றளி அமைத்தான். குடமுழுக்கு செய்ய பூசலார் வகுத்த அந்த நாளையே குறித்தான். அந்நாளின் நள்ளிரவில் காடவர் கோமான் கனவில் எழுந்தருளிய சிவபெருமான், நின்றவூர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுவோம்; உன் ஆலய குடமுழுக்கை நாளைய தினத்தில் வைத்துக் கொள்ளாது மற்றொரு நாளில் செய்வாயாக’ என்று பணித்தருளினார்.
பல்லவர்கோன், பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான். அங்குள்ளவர்களை நோக்கி, ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டார். அதுகேட்ட நின்றவூர் மக்கள்,
‘பூசலார் இவ்வூரில் கோயில் எதுவும் கட்டவில்லை’ என்றனர். மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து ‘பூசலார் யார்’ எனக்கேட்டறிந்து, அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி, ‘தேவரீர் அமைத்த திருக்கோயில் யாது? அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்தாரே” என்றார்.

பூசலார், அரசன் உரை கேட்டு மருண்டு, ‘இறைவர் என்னையும் பொருளாக அருள்செய்தாராயின் அக்கோயிலின் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். அரசன் அதிசயித்து பூசலாரை வணங்கி தனது நகருக்குச் சென்றான். அந்த பூசலார் நாயனாரின் குருபூஜை இன்று. (ஐப்பசி அனுஷம்).

எம துவிதியை 3.11.2024 ஞாயிறு

ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்குச் சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.

சிக்கல் நாகாபரணக் காட்சி 3.11.2024 ஞாயிறு

நாகாபரணம் என்பது இந்து சமயக் கோயில்களில் இறைவனுக்கு அலங்காரம் செய்யப் பயன்படும் ஆபரணங்களில் ஒன்றாகும். சிவாலயங்களின் திருவிழா, பூசைநாட்களில் மூலவரான இலிங்கத்தின் மீது இந்த ஆபரணம் சாற்றப்படுகிறது. சிக்கல் நாகை மாவட்டத்தில் உள்ள ஊர். அன்னை வேல்நெடுங்கண்ணி உடனமர் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோயில். சிக்கல் அருள்மிகு சிங்காரவேலர் திருமுகத்தில் வியர்வை சிந்தும் அற்புதம்-சூரசம்ஹாரத்திற்கு சக்திவேல் வாங்கும் கந்தஷஷ்டி திருவிழாவில் இன்று காலை 7 மணிக்கு நாகாபரணக் காட்சி. இரவு 7 மணிபவள ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா.

மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் 5.11.2024 செவ்வாய்

வைணவ ஆசார்யர்கள் பரம்பரையில் (தென்னாச்சார்ய) கடைசியாக அவதரித்தவர் மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரின் அவதாரமாகவும் அவதரித்தவர் மாமுனிகள். நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்கு அருகில் ஐப்பசித் திங்கள் ‘‘மூல’’ நட்சத்திரத்தில் அவதரித்தார். மாமுனிகளின் இயற்பெயர் ‘‘அழகிய மணவாளர்’’ என்பது. மாமுனிகளுக்கு, ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும், பிள்ளை உலகாரியனின் சீரிய நூல்களையும் கற்பித்தார் பிள்ளை உலகாரியனின் சீடரான திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வார். மணவாளரின் சீரிய பணியைக் கண்ணுற்று அவருக்கு எதிராசரிடம் பேரன்புகொண்டவர் என்ற பொருளில் ‘‘யதீந்த்ரப்ரவணர்’’ என்ற விருதை வழங்கினார், அவரது ஆசார்யரான திருவாய் மொழிப்பிள்ளை. பிள்ளை ஆணையிட்டபடி, உடையவரைப் பற்றி இருபது பாக்கள் கொண்ட ‘‘யதிராஜ விம்சதி’’ என்ற வடமொழி நூலையும், அழகிய மணவாளர் இயற்றினார் சில காலம் கழித்து, அழகிய மணவாளரை திருவரங்கம் ‘‘பெரிய கோயிலில்’’ வாழ்ந்து வைணவ சமயத் தலைமை பூண்டு பணி செய்ய ஆணையிட்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினார், திருவாய்மொழிப்பிள்ளை. அழகிய மணவாளர் செந்தமிழ், வடமொழி என்ற இருமொழியிலமைந்த வைணவ சமயநூல்களையும் பரப்பும் உபய வேதாந்த பிரவர்த்தகாசார்யராய், புகழ்மிக்கு விளங்கினார் அவர் அவதரித்த ஐப்பசி மூலம் இன்று.

காடவர் கோன் ஐயடிகள் 5.11.2024 செவ்வாய்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (காலம் கி.பி. 570 இல் இருந்து கி.பி. 585) என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் பல்லவ மன்னர் குலத்தைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும். இவர் பல்லவ மன்னராகக் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்துவந்தார்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத்தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார்.

அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம். ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை நாள்: ஐப்பசி மூலம்.

சூரசம்ஹாரம் 7.11.2024 வியாழன்

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.

நட்சத்திரங்களில் முருகனுக்கு உரிய நட்சத்திரங்கள் கார்த்திகையும் விசாகமும். திதிகளில் முருகனுக்கு உரிய திதி சஷ்டி திதி. சஷ்டி என்பது ஆறாவது திதி. ஆறு என்கின்ற எண் முருக வழிபாட்டில் மிக முக்கியமான எண். எண் கணித சாத்திரத்தில் ஆறு என்கின்ற எண் சுக்கிரனுக்கு உரியது. சகல செல்வங்களுக்கும் அதிபதியான சுக்கிரனுடைய அருள் கிடைப்பதற்கு முருகனை வணங்க வேண்டும்.

ஜாதக பாவத்தில் (வீடுகள்) ஆறு என்கின்ற பாவம் சத்ருபாவம் எனப்படும். பகையைக் குறிக்கிறது. ஒரு ஜாதகனுக்கு பகை என்கின்ற ஆறாவது பாகம் வலிமை பெற்றிருக்கும் வரை அவனால் நிம்மதியாக இருக்கமுடியாது. இந்த பகைகள் இரண்டு வகைப்படும். ஒன்று அகப்பகை. இன் னொன்று புறப்பகை. இரண்டு பகைகளையும் வெற்றிகொள்வது முருகனின் வேல். அசுர பாவங்கள் வலிமை பெறுகின்ற பொழுது ஒரு மனிதன் செய்யக்கூடாத செயல்களை எல்லாம் செய்வான். அப்
படிப்பட்ட அசுரபாவங்களின் குறியீடு தான் சூரபத்மன். இந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்து உலகைக் காத்த நாள் தான் ஐப்பசி மாத கந்த சஷ்டி நாள். திருச்செந்தூர் என்னும் படை வீட்டில் இந்த சூரசம்ஹாரப் பெருவிழா கோலாகலமாக நடைபெறும். ஐந்து நாட்களும் விரதம் இருந்து ஆறாவது நாள் காலை நீராடி விளக்குகள் ஏற்றி வைத்து முருகப்பெருமானை, திருப்புகழ், கந்த சஷ்டி, கந்தர் அனுபூதி முதலிய தோத்திரங்களால் துதிக்க வேண்டும். மாலை திருக்கோயில்களில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் கலந்துகொண்டு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உணவருந்த வேண்டும்.

2.11.2024- சனிக்கிழமை கோவர்த்தனபூஜை.
4.11.2024- திங்கட்கிழமை சோலைமலை ஸ்ரீமுருகன் யானை வாகனம்.
5.11.2024- செவ்வாய்க்கிழமை கசவனம்பட்டி மௌனகுரு குரு பூஜை.
6.11.2024- புதன்கிழமை காலை சிக்கல் சிங்காரவேலன் ரதம் மாலை வேல் வாங்குதல்.
6.11.2024- புதன்கிழமை சேனை முதலியார் திருக் குருகைப்பிரான் திருநட்சத்திரம்.
7.11.2024- வியாழக்கிழமை வாரியார் நினைவு தினம்.
8.11.2024- வெள்ளிக்கிழமை ஒப்பிலியப்பன் கல்யாணம்.
8.11.2024- வெள்ளிக்கிழமை திருவோண விரதம்.
8.11.2024- வெள்ளிக்கிழமை பொய்கை ஆழ்வார் திருநட்சத்திரம்.
8.11.2024- வெள்ளிக்கிழமை பரிமள ரங்கநாதர் உற்சவம் துவக்கம்.
8.11.2024- வெள்ளிக்கிழமை பழனி, குமாரவயலூர், திருச்செந்தூர், சிக்கல் உட்பட தமிழகமெங்கும் பல முருகன் தலங்களில் முருகன் திருக்கல்யாணம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Kanda Sashti ,Murugan ,
× RELATED சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு...