பெங்களூரு: சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஜூன் 8ம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முன்னணி கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின் நீதிமன்ற உத்தரவு பேரில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறையில் கொடுக்கப்படும் உணவை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிட அனுமதி கோரி நடிகர் தர்ஷன் தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த வாரம் சிறையில் பிரபல ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, பேக்கரி ரகு உள்பட நான்கு பேருடன் சிறை வளாகத்தில் நாற்காலியில் அமர்ந்து தர்ஷன் டீ குடித்தும் சிகரெட் பிடித்தும் ஜாலியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதை தொடர்ந்து ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்ய அனுமதி கோரி சிறை துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று நேற்று முன்தினம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடிகர் தர்ஷனை போலீஸ் பாதுகாப்புடன் பல்லாரி சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். நடிகை பவித்ரா கவுடா மற்றும் தீபக் ஆகியோர் மட்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.
The post பெங்களூரு சிறையில் ஜாலியாக இருந்த நடிகர் தர்ஷன் பல்லாரி சிறைக்கு மாற்றம் appeared first on Dinakaran.